ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெற்ற 39-வது லீக் போட்டியில் பெங்களூருவை தோற்கடித்த ராஜஸ்தான் 29 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பங்கேற்ற 8 போட்டிகளில் 6-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. புனேயில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததையடுத்து களமிறங்கிய ராஜஸ்தானுக்கு நல்ல பார்மில் இருக்கும் ஜோஸ் பட்லர் 8 (9) தேவதூத் படிக்கல் 7 (7) ஆகியோர் பெங்களூருவின் அற்புதமான பந்துவீச்சில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற ரவிச்சந்திரன் அஷ்வின் 17 (9) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக 1 பவுண்டரி 3 சிக்சருடன் 27 (21) ரன்களை விளாசி நம்பிக்கை கொடுத்து ஆட்டமிழக்க பின்னர் வந்த டார்ல் மிட்சேல் 16 (24) ரன்களில் அவுட்டானார். அந்த நிலையில் காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சிம்ரோன் ஹெட்மையரும் 3 (7) ரன்களில் அவுட்டானதால் ராஜஸ்தானின் தோல்வி ஆரம்பத்திலேயே உறுதியானது.
கலக்கிய ரியன் பராக்:
ஆனால் அந்த இக்கட்டான நிலைமையில் விளையாடிக் கொண்டிருந்த இளம் வீரர் ரியன் பரக் நீண்ட நாட்கள் கழித்து சொல்லப் போனால் 2 வருடங்கள் கழித்து அதுவரை சிறப்பாக பந்து வீசிய பெங்களூருவை கடைசி நேரத்தில் சரமாரியாக அடித்து ரன்களை குவித்தார். குறிப்பாக ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில் 18 ரன்களை தெறிக்கவிட்ட அவர் 3 பவுண்டரி 4 சிக்சர் உட்பட 56* (31) ரன்கள் குவித்து போராட்ட பினிஷிங் கொடுத்தார். பெங்களூர் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல், ஹேசல்வுட், சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

அதை தொடர்ந்து 145 ரன்கள் தானே கண்டிப்பாக பெங்களூரு எளிதாக வெற்றி பெற்றுவிடும் என நினைத்த அனைவருக்கும் அந்த அணி தனது ஒரிஜினல் பார்மை காட்டியது என்றே கூறலாம். ஏனெனில் பார்மின்றி தவிக்கும் விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்கிய போதும் 9 (10) ரன்களில் அவுட்டாக கேப்டன் டு பிளசிஸ் 3 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 23 (21) ரன்களில் நடையைக் கட்டினார். அந்த நிலையில் களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் கிளன் மேக்ஸ்வெல் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அடுத்ததாக வந்த ரஜத் படிடார் 16 (16) பிரபுதேசாய் 2 (7) சபாஸ் அஹமட் 17 (27) போன்ற கைகொடுக்க வேண்டிய இளம் வீரர்களும் சீரான இடைவெளிகளில் ராஜஸ்தானின் அபார பந்துவீச்சில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.
இறுதியில் காப்பாற்றுவார் என கருதப்பட்ட பெங்களூருவின் புதிய பினிஷர் தினேஷ் கார்த்திக்கும் எதிர்பாரா வண்ணம் ரன் அவுட்டாகி கைவிட்ட நிலையில் இதர வீரர்களும் அடுத்தடுத்து அவுட்டானதால் 19.3 ஓவரில் 115 ரன்களுக்கு சுருண்ட பெங்களூரு பரிதாபமாக தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் சார்பில் வெறும் 144 ரன்களை வெற்றிகரமாக கட்டுப்படுத்த உதவிய குல்தீப் சென் 4 விக்கெட்டுகளையும் அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

பார்முக்கு திரும்பிய பெங்களூரு:
இந்த தோல்வியால் பங்கேற்ற 9 போட்டிகளில் 5-வது தோல்வியை பதிவு செய்த அந்த அணி புள்ளி பட்டியலில் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இப்போட்டியில் கிட்டத்தட்ட 15 ஓவர்கள் வரை அபாரமாக பந்து வீசிய பெங்களூரு 20 வயது மட்டுமே நிரம்பிய ரியன் பராக்கிடம் சரணடையும் வகையில் கடைசி நேரத்தில் மோசமாக பந்துவீசி 20 – 30 ரன்களை எக்ஸ்ட்ராவாக வழங்கியது. ஆனால் அதைவிட வெறும் 145 ரன்கள் இலக்கை கிளன் மேக்ஸ்வெல், விராட் கோலி, டு பிளேஸிஸ் போன்ற நட்சத்திரங்களை வைத்துக்கொண்டு எட்ட முடியாமல் தோல்வியடைந்த பெங்களூருவை தற்போது ரசிகர்கள் தாறுமாறாகக் கலாய்க்கின்றனர்.
ஏனெனில் வரலாற்றில் பல போட்டிகளில் கையிலிருந்த நல்ல வெற்றியை இது போல ஒருசில முக்கியமான தருணங்களில் சொதப்பியதன் காரணமாக பல முறை எளிதான வெற்றியை எதிரணிக்கு பரிசளித்துள்ளது. குறிப்பாக 2016 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் கூட இதே போல ஹைதராபாத் நிர்ணயித்த 209 ரன்கள் இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு கிறிஸ் கெயில் – விராட் கோலி இணைந்து 114 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைந்த போதிலும் அதன்பின் சொதப்பிய அந்த அணி கோப்பையை எதிரணிக்கு தாரை வார்த்தது.
அதேபோலவே இந்த தொடரின் ஆரம்பத்தில் அபாரமாக செயல்பட்டு அந்த அணி ஹைதெராபாத்துக்கு எதிரான போட்டியில் வெறும் 68 ரன்களுக்கு சுருண்டு வரலாற்றில் தனது 2-வது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. அந்த மோசமான தோல்வியில் இருந்து மீண்டெழும் என பார்த்தால் அடுத்த போட்டியிலேயே அதைவிட மோசமாக வெறும் 145 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் மண்ணைக் கவ்வியது.
இதையும் படிங்க : சென்னை அணி பிளேஆப் சுற்றுக்கு போகனுனா இந்த மேஜிக் நிகழ்ந்தால் மட்டும்தான் முடியுமாம் – நடக்குமா?
இதன் காரணமாக இப்போது தான் பெங்களூரு அணி தனது உண்மையான பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளது என்று ரசிகர்கள் அந்த அணியை சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர். ஆனால் பார்முக்கு திரும்புவார் என 2 வருடங்களாக எதிர்பார்க்கப்படும் விராட் கோலி மட்டும் இன்னும் பார்முக்கு திரும்பவில்லையே என்று பெங்களூருவின் தோல்வியையும் தாண்டி ஒருசில ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.



