விராட் கோலியின் ஆல்-டைம் சாதனையை உடைத்த பாபர் அசாம் – 2 வரலாற்று சாதனைகள் படைத்து அசத்தல்

Babar
- Advertisement -

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அங்கு அந்த அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி கால்லே நகரில் ஜூலை 16-ஆம் தேதியான நேற்று துவங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து தனது முதல் இன்னிங்சில் பாகிஸ்தானின் சிறப்பான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் 222 ரன்கள் மட்டுமே சேர்த்தது. கேப்டன் கருணரத்னே 1, மேத்தியூஸ் 0, டீ சில்வா, டிக்வெல்லா 4 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிக பட்சமாக தினேஷ் சண்டிமால் 76 ரன்களும் மஹீஸ் தீக்சனா 38 ரன்களும் பெர்னாண்டோ 35 ரன்களும் எடுத்தனர்.

பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சாகின் அப்ரிடி 4 விக்கெட்டுகளையும் ஹசன் அலி மற்றும் யாசிர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். அதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தானுக்கு தொடக்க வீரர்கள் சபிக் 13, இமாம்-உல்-ஹக் 2 என சொற்ப ரன்களில் அவுட்டாகி கைவிட்ட நிலையில் அடுத்ததாக களமிறங்கிய அசார் அலியும் 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். அதனால் 24/3 என மோசமான தொடக்கத்தை பெற்ற பாகிஸ்தானுக்கு அடுத்ததாக களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் கேப்டன் பாபர் அசாம் நங்கூரமாக நின்று சரிவை சரிசெய்ய போராடினார்.

- Advertisement -

அபாரமான பாபர்:
ஆனால் முகமத் ரிஸ்வான் 19, ஆகா சல்மான் 5, நவாஸ் 5 என எதிர்ப்புறம் அந்த பேட்ஸ்மேன்கள் அவருக்கு கை கொடுக்காமல் இலங்கையின் அற்புதமான சுழல் பந்து வீச்சில் கணிசமான ரன்களைக் கூட எடுக்காமல் நடையை கட்டினார். இருப்பினும் மறுபுறம் மிகவும் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்திய பாபர் அசாம் அரை சதம் கடந்து ரன்களைக் குவிக்க போராடிய நிலைமையில் யாசிர் சா 18, ஹசன் அலி 17 என டெயில் எண்டர்களும் முடிந்த அளவுக்கு கை கொடுக்க முயற்சித்து ஆட்டமிழந்தனர்.

அதனால் 148/9 என மொத்தமாக சறுக்கிய பாகிஸ்தானுக்கு கடைசியாக களமிறங்கிய 11-வது பேட்ஸ்மேன் நசீம் ஷாவுடன் ஜோடி சேர்ந்த பாபர் அசாம் கடைசி விக்கெட்டுக்கு அற்புதமான 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 11 பவுண்டரி 2 சிக்சருடன் வெற்றிகரமாக சதமடித்து 119 (244) ரன்கள் குவித்து கடைசி பேட்ஸ்மேனாக ஆட்டமிழந்தார். அவருடன் 30 ஓவர்கள் வரை 52 பந்துகளை சந்தித்த நாசிம் ஷா 5* ரன்களை எடுத்து தனது கேப்டன் சதமடிக்க முக்கிய பங்காற்றினார். இருப்பினும் முதல் இன்னிங்க்சில் பாகிஸ்தான் 218 ரன்களுக்கு சுருண்டது. இலங்கை சார்பில் அதிகபட்சமாக ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

கோலியை முந்தினார்:
இப்போட்டியில் சுழலுக்கு சாதகமான மைதானத்தில் இதர பேட்ஸ்மேன்கள் தடுமாறியபோது கேப்டன் என்ற பொறுப்புடன் தனி ஒருவனாக அபாரமாக பேட்டிங் செய்த பாபர் அசாம் சமூக வலைதளங்களில் நிறைய ஜாம்பவான்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 7-வது சதத்தை அடித்த இதுவரை 41 போட்டிகளில் 2970 ரன்களை எடுத்துள்ளார். சமீப காலங்களில் அபாரமாக செயல்பட்டு இந்தியாவின் விராட் கோலியை முந்தி உலகின் நம்பர்-1 ஒருநாள் மற்றும் டி20 பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 4442 ரன்களையும் (89 போட்டிகள்) டி20 கிரிக்கெட்டில் 2686 (74 போட்டிகள்) ரன்களையும் எடுத்துள்ளார்.

மொத்தமாக சேர்த்து 10000 ரன்களை கடந்துள்ள அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 10000 ரன்களை கடந்த ஆசிய பேட்ஸ்மேன் என்ற விராட் கோலியின் ஆல்-டைம் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார். உலக அளவில் 5-வது பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அந்த பட்டியல் இதோ:
1. பாபர் அசாம் : 228 இன்னிங்ஸ்
2. விராட் கோலி : 232 இன்னிங்ஸ்

- Advertisement -

அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 10000 ரன்களை எடுத்த பாகிஸ்தான் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. பாபர் அசாம் : 228 இன்னிங்ஸ்
2. ஜாவேத் மியான்டட் : 248 இன்னிங்ஸ்
3. சயீத் அன்வர் : 255 இன்னிங்ஸ்

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை சதமடித்த முதல் பாகிஸ்தான் கேப்டன் என்ற புதிய வரலாற்று சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் இன்சமாம்-உல்-ஹக் உட்பட வரலாற்றின் வேறு எந்த பாகிஸ்தான் கேப்டனும் இலங்கை மண்ணில் சதமடித்தது கிடையாது. இதுபோக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த பாகிஸ்தான் கேப்டன் என்ற இன்சமாம் ஆல்-டைம் சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. பாபர் அசாம் : 9*
2. இன்சமாம் : 9
3. மிஸ்பா-உல்-ஹக் : 8
4. இம்ரான் கான் : 6

இதையும் படிங்க : IND vs ENG : 3 ஆவது போட்டியில் பும்ராவின் நீக்கத்திற்கான காரணம் என்ன? – கேப்டன் ரோஹித் சர்மா பதில்

இப்படி இந்த வயதிலேயே விராட் கோலி உட்பட பலரின் சாதனைகளை உடைத்துள்ள இவர் தன்னுடைய மிகப்பெரிய வருங்கால கரியரிருக்கு இப்போது வலுவான ஆழமான அடித்தளத்தை போட்டுள்ளது பாராட்டுக்குரிய அம்சமாகும்.

Advertisement