ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் கோலாலமாக துவங்கியது. கராச்சியில் துவங்கிய அந்தத் தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் பாகிஸ்தான் தங்களது சொந்த மண்ணில் நியூசிலாந்தை எதிர்கொண்டது. ஆனால் அந்தப் போட்டியில் பாகிஸ்தானை 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த நியூஸிலாந்து தொடரை வெற்றிகரமாக துவக்கியது.
அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அபாரமாக பேட்டிங் செய்து 321 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக வில் எங் 107, டாம் லாதம் 118*, கிளன் பிலிப்ஸ் 61 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக நாசீம் ஷா, ஹரிஷ் ரவூப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அடுத்ததாக பேட்டிங் செய்த பாகிஸ்தான் ஆரம்பம் முதலே திணறலாக விளையாடி 47.2 ஓவரில் 260 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
ஆமை போல ரிஸ்வான்:
அதிகபட்சமாக பாபர் அசாம் 64, குஷ்தில் ஷா 69 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் சான்ட்னர், வில்லியம் ஓ’ரோர்கே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். முன்னதாக அந்தப் போட்டியில் அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக விளையாடிய பாபர் அசாம் 64 ரன்களை 71.11 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமே எடுத்தார்.
ஷகீல் 6, கேப்டன் ரிஸ்வான் 3 ரன்களில் அவுட்டானதால் 22-2 என பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே தடுமாறியது. அப்போது எதிர்புறம் அடித்து நொறுக்கி அழுத்தத்தை உடைக்க வேண்டிய பாபர் அசாம் மிகவும் நிதானமாக விளையாடினார். அதனால் மற்றொருபுறம் அதிகப்படியான அழுத்தம் உண்டானதால் அதை சமாளிக்க முடியாமல் பகார் ஜமான் 24, சல்மான் ஆஹா 42 ரன்களில் அவுட்டானார்கள்.
அஸ்வின் விளாசல்:
மொத்தத்தில் இந்தப் போட்டியில் மிகவும் மெதுவாக விளையாடிய பாபர் அசாம் சுயநலத்துடன் அரை சதத்தை அடித்து தனது பேட்டிங் சராசரியை காப்பாற்றிக் கொண்டதாக ரசிகர்கள் விமர்சிக்கிறார்கள். இது பற்றி முன்னாள் இந்திய வீரர் முகமது கைப் ட்விட்டரில் விமர்சித்தது பின்வருமாறு. “1980கள் போல பாபர் அசாம் இன்னும் ஒருநாள் கிரிக்கெட்டை விளையாடுகிறார்”
இதையும் படிங்க: இந்திய அணியில் 5 ஸ்பின்னர்கள் எதுக்கு? எங்களோட பிளானை புரிஞ்சிக்கோங்க.. கேப்டன் ரோஹித் பேட்டி
“பகுதி நேர ஸ்பின்னர்களிடம் 2 பவுண்டரிகள் மட்டுமே அடித்து மிடில் ஓவர்களில் ரன்களை கரக்கிறார். இது நவீன கிரிக்கெட்டில் வேலையாகாது” என்று கூறியுள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் ட்விட்டரில் “சல்மானுடன் சேர்ந்து பாபர் அசாம் 50 ரன்களை எட்டிய பயணம். ஆமை மற்றும் முயல் கதையின் சிறந்த சித்தரிப்பாக இருக்க வேண்டும். 50 ரன்கள் வேகமாக வர வேண்டும் என்று நான் நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.



