ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் கோலாகலமாக துவங்கிய நடைபெற்று வருகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாடுகிறது. முன்னதாக இந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் 5 ஸ்பின்னர்கள் தேர்வு செய்யப்பட்டது விமர்சனங்களை எழுப்பியது. குறிப்பாக ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள்.
கடைசி நேரத்தில் ஜெய்ஸ்வாலை பெஞ்சில் அமர வைத்த இந்திய அணி நிர்வாகம் தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை தேர்ந்தெடுத்தது. ஆனால் இந்தியா தங்களுடைய போட்டிகளை விளையாடும் துபாய் மைதானம் பெரியளவில் ஸ்பின்னர்களுக்கு உதவி செய்யாது. எனவே பும்ரா இல்லாத சூழ்நிலையில் சிராஜ் போன்ற வேகப்பந்து வீச்சாளரை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று விமர்சனங்கள் எழுந்தன.
இந்தியாவின் பிளான்:
இந்நிலையில் இந்திய அணியில் 5 ஸ்பின்னர்கள் இருப்பதாக சொல்பவர்கள் 3 சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் இருப்பதை புரியாமல் பேசுவதாக கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார். ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஆல் ரவுண்டர்களாக இருக்கிறார்கள். எனவே குல்தீப், வருண் ஆகியோர் மட்டுமே முழு நேர ஸ்பின்னர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் ஆல் ரவுண்டர்களை வைத்து இந்திய அணி வகுக்கும் திட்டம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எங்களிடம் 2 ஸ்பின்னர்கள் 3 ஆல் ரவுண்டர்கள் இருக்கிறார்கள். நான் அவர்களை 5 ஸ்பின்னர்களாக பார்க்கவில்லை. அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் எங்களுக்கு பேட்டிங்கில் ஆழமான திறமையைக் கொடுப்பார்கள்”
ரோஹித் விளக்கம்:
“மற்ற அணிகள் 6 வேகப்பந்து வீச்சாளர்களை எடுத்து வருகிறார்கள். அதில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களும் உள்ளார்கள். ஆனால் அது போன்ற அணிகளில் அவ்வளவு வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்று யாரும் கேட்பதில்லை. அது அவர்களுடைய பலம். நாங்கள் எங்களுடைய பலத்தில் கவனம் செலுத்துகிறோம். ஒவ்வொரு ஐசிசி தொடரும் முக்கியம்”
இதையும் படிங்க: இந்தியா – வங்கதேசம் போட்டி நடைபெறும் துபாய் மைதானம் எப்படி? புள்ளிவிவரம், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்
“நாங்கள் கோப்பையை கையில் ஏந்துவதற்காக நிறைய விஷயங்களை செய்கிறோம். சுப்மன் கில் கிளாஸ் பிளேயர். அவருடைய புள்ளிவிவரங்கள் சிறப்பாக இருக்கிறது. அதனாலேயே அவரை நாங்கள் துணைக் கேப்டனாக நியமித்தோம். அதில் காரணங்கள் இருக்கிறது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.



