வீடியோ: மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தான், பாபர் அசாம் புது ரகமான பரிதாப ஹாட்ரிக் உலக சாதனை – கலாய்க்கும் ரசிகர்கள்

- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கடுமையாக போராடி டிரா செய்து கோப்பையை பகிர்ந்து கொண்ட பாகிஸ்தான் அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரிலும் 1 வெற்றி மற்றும் தோல்வியை சந்தித்தது. அதனால் சமனடைந்த அத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி ஜனவரி 13ஆம் தேதியன்று கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 280/9 ரன்கள் சேர்த்து அசத்தியது.

ஷான் மசூட் 0, கேப்டன் பாபர் அசாம் 4 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானதால் 21/2 என தடுமாறிய அந்த அணிக்கு மற்றொரு தொடக்க வீரர் பக்கார் ஜமான் சதமடித்து 101 (122) ரன்களும் நம்பிக்கை நட்சத்திரம் முகமது ரிஸ்வான் 77 (74) ரன்களும் குவித்து காப்பாற்றினர். இறுதியில் ஆஹா சல்மான் 45 (43) ரன்கள் எடுத்து பினிஷிங் கொடுத்த நிலையில் நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிம் சௌதீ 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதை தொடர்ந்து 281 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு ஃபின் ஆலன் 25, டேவோன் கான்வே 52 என தொடக்க வீரர்கள் நல்ல ரன்களை குவித்து நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

- Advertisement -

புது ஹாட்ரிக்:
அவர்களுக்கு பின் மிடில் ஆர்டரில் கேப்டன் வில்லியம்சன் 53 ரன்களும் எடுத்தாலும் டார்ல் மிட்சேல் 31, டாம் லாதம் 16, மைக்கேல் பிரேஸ்வெல் 7 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 181/5 என தடுமாறிய அந்த அணிக்கு கடைசி நேரத்தில் மிச்செல் சாட்னர் முக்கியமான 15 ரன்கள் எடுக்க மறுபுறம் வெளுத்து வாங்கிய கிளன் பிலிப்ஸ் 4 சிக்சரை பறக்க விட்டு 63* (42) ரன்கள் குவித்து பினிஷிங் கொடுத்தார். அதனால் 48.1 ஓவரில் 281/8 ரன்களை எடுத்த நியூசிலாந்து போராடி 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2 – 1 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்று பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை வெற்றியுடன் நிறைவு செய்தது.

மறுபுறம் 2022இல் ஏற்கனவே ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை பைனலில் தோல்வியடைந்து சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் தற்போது ஒருநாள் தொடரிலும் நியூசிலாந்திடம் மண்ணைக் கவ்வி படுதோல்வியை சந்தித்துள்ளது. அப்படி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் வெவ்வேறு அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் ஒரு தொடரை கூட வெல்ல முடியாத பாகிஸ்தானை “நீங்க எதுக்குமே சரிப்பட்டு வர மாட்டீங்க” என்று மீண்டும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

- Advertisement -

முன்னதாக வெற்றியாளரை தீர்மானித்த இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தானுக்கு 3வது இடத்தில் களமிறங்கிய பாபர் அசாம் 13 பந்துகளில் 4 ரன்களை 30.77 என்ற படுமோசமான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து கேப்டனாக பொறுப்பாகவும் விளையாடாமல் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக அதிரடியாகவும் விளையாடாமல் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதை விட மைக்கேல் ப்ரெஸ்வெல் வீசிய பந்தில் கட் சாட் அடிக்க முயற்சித்து தவற விட்ட அவர் தன்னுடைய பேலன்ஸ்சையும் கோட்டை விட்டு காலை வெள்ளை கோட்டிலிருந்து எடுத்து மீண்டும் கவனக்குறைவாக வைத்தார்.

அதை பயன்படுத்திய விக்கெட் கீப்பர் டாம் லாதம் கச்சிதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பிங் செய்து அவுட்டாக்கினார். முன்னதாக இத்தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இதே போலவே ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்த அவர் தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகளில் ஹாட்ரிக் ஸ்டம்பிங் முறையில் அவுட்டாகியுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் “விக்கெட், பவுண்டரி, சிக்ஸர்களில் ஹாட்ரிக் பாத்திருக்கோம் இது என்னப்பா புது ரகமான ஹாட்ரிக்கா இருக்கு” என்று சமூக வலைத்தளங்களில் வியப்பை வெளிப்படுத்தினர்.

இதையும் படிங்க: உறுதியானது கே.எல் ராகுலின் திருமணம். கரம் பிடிக்கப்போகும் மணப்பெண் யார் தெரியுமா? – விவரம் இதோ

சொல்லப்போனால் இது ஒரு உலக சாதனையாக இருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கணித்தார்கள். அவர்களது கணிப்பு உண்மையாகும் வகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே தொடரில் 3 முறை தொடர்ந்து ஸ்டம்பிங் முறையில் அவுட்டான வீரர் என்ற பரிதாப உலக சாதனையை பாபர் அசாம் பகிர்ந்து கொண்டுள்ளார். இதற்கு முன் அகமது ஷேஷாத், வாசிம் அக்ரம், ஸ்டுவர்ட் மட்சிகென்யெரி ஆகியோர் இரு வெவ்வேறு தொடர்களில் 3 தொடர்ச்சியான போட்டிகளில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement