ஆஸ்திரேலியாவில் 2025/26 பிக்பேஷ் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. அந்தத் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக பாகிஸ்தானைச் சேர்ந்த நட்சத்திர வீரர் பாபர் அசாம் முதல் முறையாக விளையாடுகிறார். ஒரு காலத்தில் விராட் கோலியை விட பாபர் அசாம் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தானை சேர்ந்த ரசிகர்களும் முன்னாள் வீரர்கள் கொண்டாடினர்.
அதற்குப் பரிசாக 2022, 2024 டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்பே மற்றும் அமெரிக்கா ஆகிய கத்துக்குட்டிகளிடம் அவரது தலைமையில் பாகிஸ்தான் அவமானத் தோல்வியை சந்தித்தது. 2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானிடம் முதல் முறையாக பாகிஸ்தான் தோற்றது. கூடவே இந்தியாவுக்கு எதிராக விளையாடிய அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தான் படுதோல்வியைச் சந்தித்தது.
டி20யில் டெஸ்ட்:
அதற்கு பேட்டிங்கில் பெரிய ரன்கள் குவிக்கத் தவறிய பாபர் அசாம் முக்கிய காரணமாக அமைந்ததால் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்பும் பெரிய ரன்கள் குவிக்கத் தடுமாறிய அவர் பாகிஸ்தானின் தோல்விகளுக்கு காரணமானார். அதனால் தயவு செய்து இவரை விராட் கோலியுடன் ஒப்பிடாதீர்கள் என்று சோயம் அக்தர் போன்ற முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் விமர்சித்தனர்.
இதற்கிடையே 2023க்குப்பின் சதமடிக்காமல் தடுமாறிய பாபர் அசாம் கடந்த அக்டோபர் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சுமார் 3 வருடங்கள் கழித்து சதமடித்தார். அதனால் ஃபார்முக்கு திரும்பிய அவர் ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் தொடரில் அசத்துவார் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் நம்பிக்கைத் தெரிவித்தார்கள். அதே போல பிக்பேஷ் நிர்வாகம் “கிங் பாபர் அசாம் ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளார்” என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரவேற்றது.
அம்பலமான பாபர்:
அந்த வரவேற்புக்கு மத்தியில் விளையாடிய பாபர் அசாம் முதல் 2 போட்டிகளில் 2 (5), 9 (10) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். இருப்பினும் அடிலெய்ட் அணிக்கு எதிரான 3வது போட்டியில் மெதுவாக விளையாடிய அவர் அரை சதமடித்து 58 (42) ரன்கள் அடித்தார். அதனால் ஆஸ்திரேலியா சூழ்நிலைகளைப் பழகிக்கொண்ட அவர் அடுத்தப் போட்டியில் அடுத்து நொறுக்குவார் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆஸி செய்றது அநியாயம்.. உழைக்காம ஜெய்க்க பாக்குறாங்க.. அவரை எப்படி அடிக்கிறதுன்னே தெரியல.. குக் விமர்சனம்
ஆனால் டிசம்பர் 26ஆம் தேதி கிறிஸ்மஸ் தினத்திற்கு அடுத்த நாளான பாக்ஸிங் டேவில் பாபர் அசாம் மெல்போர்னுக்கு எதிரான போட்டியில் விளையாடினார். அப்போட்டியில் மீண்டும் தடவலாக விளையாடிய அவர் 2 (7) ரன்களில் அவுட்டாகி பாக்ஸிங் டேவில் தனது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைச் பரிசாகக் கொடுத்தார். மொத்தத்தில் ஆஸ்திரேலியாவில் பாபர் அசாம் டி20 கிரிக்கெட்டில் டெஸ்ட் போல மெதுவாக விளையாடி வருகிறார். அதைப் பார்க்கும் எதிரணி ரசிகர்கள் ஜிம்பாப்வே, நேபாளம், அயர்லாந்து போன்ற கத்துக்குட்டிகளுக்கு எதிராக அசத்திய பாபர் அசாமின் உண்மையான திறமை ஆஸ்திரேலியாவில் அம்பலமாகியுள்ளதாக விமர்சிக்கிறார்கள்.



