விராட், ரோஹித்தின் சாதனையை உடைத்து 2 புதிய உலக சாதனை படைத்த பாபர் அசாம் – தோனியின் சாதனையும் தகர்ப்பு

Babar Azam
- Advertisement -

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வரும் நியூசிலாந்து முதல் போட்டியில் படுதோல்வியை சந்தித்தது. மறுபுறம் சொந்த மண்ணில் முதல் போட்டியிலேயே வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற பாகிஸ்தான் ஏப்ரல் 15ஆம் தேதியான நேற்று கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு இம்முறை ஆரம்பத்திலேயே அதிரடியாக செயல்பட்டு நியூசிலாந்து பவுலர்களை 10.4 ஓவர்கள் மிகச் சிறப்பாக எதிர்கொண்டு பாபர் அசாம் – முகமது ரிஸ்வான் ஜோடி 99 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து வலுவான சிறப்பான தொடக்கம் கொடுத்தது.

அதில் முகமது ரிஸ்வான் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 50 (34) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த பகார் ஜமான் மற்றும் சாய்ம் ஆயுப் ஆகியோர் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். போதாக்குறைக்கு அடுத்து வந்த இமாம் வசிம் 2 (5) ரன்களில் ஆட்டமிழந்தாலும் மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக செயல்பட்ட கேப்டன் பாபர் அசாம் அரை சதமடித்து அசத்தினார். அவருடன் கடைசி நேரத்தில் களமிறங்கிய இப்திகார் அகமது தனது பங்கிற்கு அதிரடியாக 1 பவுண்டரி 3 சிக்சருடன் 33* (19) ரன்கள் விளாசினார்.

- Advertisement -

பாபர் உலக சாதனை:
அந்த நிலையில் 19.2 ஓவரில் 84 (53) ரன்களில் இருந்த பாபர் அசாம் கடைசி ஓவரில் ஜிம்மி நீசம் வீசிய 3வது பந்தில் சிக்ஸரை பறக்க விட்டு 4வது பந்தில் டபுள் எடுத்து 5வது பந்தில் பவுண்டரி அடித்தார். அதனால் கடைசி பந்தில் சதமடிக்க 3 ரன்கள் தேவைப்பட்ட போது டீப் கவர்ஸ் திசையில் அதிரடியான பவுண்டரியை பறக்க விட்ட அவர் 11 பவுண்டரி 3 சிக்சருடன் 101* (58) ரன்கள் குவித்து சூப்பர் பினிஷிங் கொடுத்தார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் பாகிஸ்தான் 192/4 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மாட் ஹென்றி 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

இந்த சதத்தையும் சேர்த்து இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அடித்துள்ள 3 சதங்களையும் பாகிஸ்தானின் கேப்டனாக பாபர் அசாம் அடித்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த கேப்டன் என்ற இந்தியாவின் ரோகித் சர்மா சாதனையை உடைத்துள்ள அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4 சதங்கள் அடித்துள்ள ரோகித் சர்மா அதில் 2 மட்டுமே இந்தியாவின் கேப்டனாக அடித்துள்ளார். தற்போது 3 சதங்களை கேப்டனாக அடித்துள்ள பாபர் அசாம் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

- Advertisement -

அத்துடன் ஒட்டுமொத்தமாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த 2வது வீரர் என்ற சாதனையை கிளன் மேக்ஸ்வெல், கோளின் முன்றோ, சூரியகுமார் யாதவ் (தலா 3) ஆகியோருடனும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். அது போக பிஎஸ்எல் போன்ற அனைத்து வகையான டி20 கிரிக்கெட்டையும் சேர்த்து 9 சதங்களை அடித்துள்ள பாபர் அசாம் அதில் 6 சதங்களை கேப்டனாக அடித்துள்ளார். அதன் வாயிலாக ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த கேப்டன் என்ற உலக சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் விராட் கோலி மற்றும் பஃப் டு பிளேஸிஸ் ஆகியோர் கேப்டன்களாக தலா 5 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

அதை தொடர்ந்து 193 ரன்களை துரத்திய நியூசிலாந்து மீண்டும் பாகிஸ்தானின் தரமான பந்து வீச்சில் எவ்வளவோ முயற்சித்தும் 20 ஓவர்களில் 154/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. டாம் லாதம் 19, பௌஸ் 26, வில் எங் 9, டார்ல் மிட்சேல் 9, ஜிம்மி நீசம் 1 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுடடான அந்த அணிக்கு அதிகபட்சமாக மார்க் சேப்மேன் 4 பவுண்டரி 4 சிக்ஸருடன் 65* (40) ரன்கள் எடுத்து போராடியும் வெற்றி பெற வைக்க முடியவில்லை. பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஹாரீஸ் ரவூப் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதையும் படிங்க:10 வருஷம் 332 நாட்கள் கழித்து ஐ.பி.எல் போட்டியில் விளையாடிய பஞ்சாப் வீரர் – அரிதிலும் அரிதான சாதனை

அதனால் 38 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்ற பாகிஸ்தான் 2 – 0* (5) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டனாக தோனியை மிஞ்சி புதிய உலக சாதனையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த பட்டியல்:
1. இயன் மோர்கன்/பாபர் அசாம்/அஸ்கர் ஆஃப்கன் : தலா 42
2. எம்எஸ் தோனி : 41
3. ஆரோன் ஃபின்ச் : 40

Advertisement