ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்த பிறகு தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. அதனைத்தொடர்ந்து இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நேற்று லாகூர் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 313 ரன்கள் குவிக்க அடுத்ததாக விளையாடிய பாகிஸ்தான் 45.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி 88 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதன்படி நேற்றைய போட்டியில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 4 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையில் ஹசிம் ஆம்லாவிற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
இந்த 4000 ரன்களை குவிக்க இவர் 82 இன்னிங்ஸ்களில் மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளார். இவருக்கு முன்னதாக ஹசிம் ஆம்லா 81 இன்னிங்ஸ்களில் 4000 ரன்கள் கடந்ததே சாதனையாக உள்ளது. மேலும் பாபர் அசாம் விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் விராட் கோலி, டேவிட் வார்னர் ஆகியோரையும் பின்தள்ளி உள்ளார் என்பது கூடுதல் சிறப்பம்சம்.
விவியன் ரிச்சர்ட்ஸ் 91 இன்னிங்ஸ்களிலும், விராட் கோலி மற்றும் வார்னர் ஆகியோர் 93 இன்னிங்ஸ்களிலும் 4,000 ரன்களை எட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 3 ஆயிரம் ரன்களில் இருந்து 4 ஆயிரம் ரன்களை எட்ட பாபர் அசாம் வெறும் 14 இன்னிங்ஸ்களை மட்டுமே எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஐபிஎல் கோப்பையை கூட ஈசியா வாங்கிடலாம் ஆனால் இதை செய்வது ரொம்ப கஷ்டம் – ட்வயன் ப்ராவோ
இந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்கிற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கும் வேளையில் நாளை மார்ச் 31 ஆம் தேதி 2 ஆவது ஒருநாள் போட்டி லாகூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.