மனசுல சூப்பர்ஸ்டார்ன்னு நினைப்பா? பாபர் அசாம் – ஷாஹீன் அப்ரிடி இடையே வாக்குவாதம்.. தோல்வியால் பாக் அணியில் ஏற்பட்ட மோதல்

Babar Azam Shaheen Afirdi
Advertisement

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் நடப்பு சாம்பியன் இலங்கை ஆகிய அணிகள் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் தேவையான வெற்றிகளைப் பெற்று ஃபைனலுக்கு தகுதி பெற்றன. இருப்பினும் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றுடன் வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. சொல்லப்போனால் ஷாஹீன் அப்ரிடி, ஹரிஷ் ரவூப் போன்ற தரமான பவுலர்களை கொண்ட அந்த அணி இந்தியாவை தோற்கடிக்கும் என்று நிறைய முன்னாள் வீரர்கள் கணித்தார்கள்.

ஆனால் லீக் சுற்றில் நேபாள் அணியை மட்டுமே தோற்கடித்த பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவிடம் 228 ரன்கள் வித்தியாசத்தில் வரலாறு காணாத படுதோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக மனதளவில் உடைந்து போன அந்த அணி மோசமான ரன் ரேட்டை பெற்றதால் இலங்கைக்கு எதிரான நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. ஆனால் அதிலும் சுமாராகவே செயல்பட்ட பாகிஸ்தான் கடைசி பந்தில் வெற்றியை நழுவ விட்டது.

- Advertisement -

பாகிஸ்தான் அணியில் மோதல்:
இதன் காரணமாக வழக்கம் போல ஏராளமான முன்னாள் வீரர்கள் பாகிஸ்தான் அணியை சரமாரியாக விமர்சித்து வரும் நிலையில் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். இந்த நிலைமையில் இலங்கையிடம் சந்தித்த தோல்விக்கு பின் உடைமாற்றும் அறையில் நிகழ்ந்த மீட்டிங்கில் பாகிஸ்தான் அணி வீரர்களிடம் கேப்டன் பாபர் அசாம் கோபமாக பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது பற்றி டான் நியூஸ் எனும் பாகிஸ்தான் இணையத்தில் வெளியாகியுள்ள செய்தியின் படி பாகிஸ்தான் அணி வீரர்கள் முக்கியமான தருணங்களில் பொறுப்புடன் செயல்படவில்லை என்று பாபர் அசாம் மீட்டிங்கில் வெளிப்படையாக கோபமாக பேசியதாக தெரிய வருகிறது. அதற்கு வெற்றி தோல்வி சகஜம் என்பதால் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை பாராட்டுமாறு நட்சத்திர இடது கை பந்து வீச்சாளர் சாகின் அப்ரிடி பதிலடி கொடுத்துள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

அதனால் ஏற்கனவே கோபத்தில் இருந்த பாபர் அசாம் மேலும் கோபமடைந்து “அணியில் யார் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதை நான் அறிவேன் என்பதால் யாரும் மனதில் சூப்பர் ஸ்டார் என்று நினைத்துக் கொண்டு பேச வேண்டாம்” என அவருக்கு பதிலளித்ததாக தெரிய வந்துள்ளது. அந்த வகையில் காரசாரமாக மாறிய அந்த வாக்குவாதத்தை உடனடியாக முகமது ரிஷ்வான் இடையே புகுந்து நிறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 2023 உ.கோ வெற்றி வரும் ஆனா வராது.. இங்கிலாந்து, ஆஸி மாதிரி உங்ககிட்ட அந்த பலம் இல்ல – இந்தியா பற்றி நாசர் ஹுசைன் பேட்டி

இதனால் பாகிஸ்தான் அணியில் மோதல் மற்றும் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்று அந்நாட்டு ஊடகங்கள் பரபரப்பாக விவாதித்து வருகின்றன. இதைத்தொடர்ந்து 2023 உலகக்கோப்பையில் தன்னுடைய முதல் போட்டியில் நெதர்லாந்தை அக்டோபர் 6ஆம் தேதி பாகிஸ்தான் எதிர்கொள்கிறது. அதில் ஹரிஷ் ரவூப், நாசீம் ஷா ஆகியோர் காயத்தால் விளையாடுவார்களா என்பது சந்தேகமாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement