முக்கிய நேரத்தில் விஸ்வரூபம் எடுத்த பாபர் – ரிஸ்வான் ஜோடி, வெற்றியுடன் படைத்த 2 புதிய உலக சாதனைகள் இதோ

Babar Azam Moahmmed Rizwan Pak vs NZ
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் வரலாற்றில் 8வது முறையாக எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலக கோப்பையில் 2009க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே இந்தியா மற்றும் ஜிம்பாப்வேவிடம் அதிர்ச்சி தோல்விகளை சந்தித்ததால் கதை முடிந்ததாக கருதப்பட்டது. ஆனால் மனம் தளராமல் அதற்கடுத்த 2 போட்டிகளில் வென்ற அந்த அணி கடைசி நேரத்தில் நெதர்லாந்திடம் தென்னாபிரிக்கா தோற்றதால் கிடைத்த அதிர்ஷ்டத்தில் யாருமே எதிர்பாராத வகையில் அரையிறுதிக்குள் நுழைந்தது. அதை தொடர்ந்து நவம்பர் 9ஆம் தேதியன்று வலுவான நியூசிலாந்தை முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் எதிர்கொண்டது.

புகழ்பெற்ற சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து பாகிஸ்தானின் தரமான பந்து வீச்சில் 20 ஓவரில் 152/4 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு ஃபின் ஆலன் 4 (3) டேவோன் கான்வே 21 (20) கிளென் பிலிப்ஸ் 6 (8) என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 49/3 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்று தடுமாறி அந்த அணியை 4வது விக்கெட்டுக்கு டார்ல் மிட்சேலுடன் 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்த கேப்டன் கேன் வில்லியம்சன் கடைசி வரை அதிரடி காட்டாமல் கடைசி நேரத்தில் 46 (42) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.

- Advertisement -

விஸ்வரூப ஜோடி:
இருப்பினும் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய டார்லிங் மிட்சேல் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 53 (35) ரன்களும் ஜிம்மி நீசம் 16 (12) ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றினர். பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஷாகின் அப்ரிடி 2 விக்கெட்டுகளை சாய்ந்தார். அதை தொடர்ந்து 153 ரன்களை துரத்திய அந்த அணிக்கு சமீப காலங்களில் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி சுமாரான பார்மில் தவிப்பதால் விமர்சனத்திற்கு உள்ளாகி நின்ற கேப்டன் பாபர் அசாம் – முஹம்மது ரிஸ்வான் ஓப்பனிங் ஜோடி இந்த முக்கியமான போட்டியில் விஸ்வரூபம் எடுத்து அபாரமாக விளையாடியது.

குறிப்பாக ஏற்கனவே மிடில் ஆர்டர் தடுமாறுவதால் தாங்கள் அடித்தால் தான் எளிதாக வெற்றி பெற முடியும் என்பதை உணர்ந்து முதல் பந்திலிருந்தே பவுண்டரிகளை பறக்க விட்ட இந்த ஜோடி விரைவாக ரன்களை சேர்த்தது. இவர்களைப் பிரிக்க கேப்டன் வில்லியம்சன் போட்ட அத்தனை யுக்திகளையும் அடித்து நொறுக்கிய இந்த ஜோடி 13 ஓவர்கள் வரை நங்கூரமாக நின்று 105 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்த போது பாபர் அசாம் 7 பவுண்டரியுடன் 53 (42) ரன்களும் முகமது ரிஸ்வான் 5 பவுண்டரியுடன் 57 (43) ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். இறுதியில் முகமது ஹாரிஸ் 30 (26) ரன்கள் எடுத்ததால் 153/3 ரன்களை எடுத்த பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

- Advertisement -

இதனால் 1992 போல மீண்டும் தங்களது அணி கோப்பையை வெல்லுமா என்று எதிர்பார்ப்பு பாகிஸ்தான் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. மறுபுறம் இந்த முக்கிய போட்டியில் டாஸ் வென்றும் பேட்டிங்கில் 160 ரன்களை எடுக்க தவறிய நியூசிலாந்து பந்து வீச்சிலும் பீல்டிங்கிலும் சுமாராக செயல்பட்டு பரிதாபமாக வெளியேறியது. இந்த வெற்றியை 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து எளிதாக்கிய பாபர் – ரிஸ்வான் ஜோடி டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற புதிய உலக சாதனை படைத்தனர். அந்த பட்டியல்:
1. முகமது ரிஸ்வான் – பாபர் அசாம் : 3*
2. கில்கிறிஸ்ட் – ஹெய்டன் : 2
3. அலெக்ஸ் ஹேல்ஸ் – இயன் மோர்கன் : 2
4. ஜெயவர்தனே – சங்ககாரா : 2
5. விராட் கோலி – ரோகித் சர்மா : 2
6. ஷேன் வாட்சன் – டேவிட் வார்னர் : 2

மேலும் டி20 உலக கோப்பை அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள் குவித்த ஜோடி என்ற உலக சாதனையும் அவர்கள் படைத்தனர். அந்த பட்டியல்:
1. முகமது ரஸ்மான் – பாபர் அசாம் : 607*
2. திலகரத்னே தில்சன் – மகிளா ஜெயவர்த்தனே : 572
3. மகிளா ஜெயவர்த்தனே – குமார் சங்ககாரா : 572

அதுபோக ஏற்கனவே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடியாகவும் சாதனை படைத்து வருகின்றனர். அந்த பட்டியல்:
1. முகமது ரிஸ்வான் – பாபர் அசாம் : 9
2. ரோகித் சர்மா கேஎல் ராகுல் : 5

Advertisement