
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வென்றது. கடந்த வாரம் நிறைவு பெற்ற அத்தொடரின் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் கோவையை வீழ்த்தி திண்டுக்கல் வென்றது. அதன் வாயிலாக டிஎன்பிஎல் கோப்பையை முதல் முறையாக வென்று திண்டுக்கல் அணி சாதனை படைத்தது.
அந்த வெற்றிக்கு கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் மிகவும் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக எலிமினேட்டர் போட்டியில் அரை சதமடித்த அவர் குவாலிபயர் 2 போட்டியிலும் அரை சதமடித்து தனது அணியை ஃபைனலுக்கு அழைத்துச் சென்றார். அத்துடன் சென்னையில் நடைபெற்ற இறுதிப் போட்டியிலும் கோவைக்கு எதிராக அரை சதமடித்த அவர் ஆட்டநாயகன் விருது வென்று திண்டுக்கல்லை வெற்றி பெற வைத்தார்.
அஸ்வினின் கனவு:
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவுக்காக நிறைய சாதனைகளை படைத்திருந்தும் ஐபிஎல் கோப்பையை கேப்டனாக வெல்ல வேண்டும் என்பது ரவிச்சந்திரன் அஸ்வினின் கனவாக இருப்பதாக பாபா இந்திரஜித் தெரிவித்துள்ளார். அத்துடன் திண்டுக்கல் அணியில் பயிற்சியாளர் இல்லாத குறையை தீர்க்கும் அளவுக்கு அஸ்வின் தம்முடைய அனுபவத்தை பயன்படுத்தி அனைத்து வீரர்களையும் வழி நடத்தியதாக அவர் பாராட்டியுள்ளார்.
சொல்லப்போனால் ஒரு பயிற்சியாளரை விட ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக செயல்பட்டதாக தெரிவிக்கும் பாபா இந்திரஜித் இது பற்றி பேசியது பின்வருமாறு. “கிரிக்கெட்டைப் பற்றிய சிறந்த மூளையை கொண்டுள்ள அவரை நாங்கள் அனைவருமே கேப்டனாக பார்த்தோம். அவர் எப்போதும் பேட்ஸ்மேன் அல்லது பவுலருக்கு மேலே இருப்பதை பற்றி சிந்திப்பார். அவரிடம் கேப்டனுக்கு தேவையான அனைத்து தலைமைப் பண்புகளும் உள்ளது”
“ஐபிஎல் கோப்பையையும் கேப்டனாக வெல்ல வேண்டும் என்ற கனவு அவரிடம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அவர் தன்னுடைய திறன் மட்டுமல்லாமல் மற்ற வீரர்களின் திறனை வளர்ப்பதற்கும் களத்திலும் களத்திற்கு வெளியேயும் தன்னைத் தானே ஈடுபடுத்திக் கொண்டார். கடந்த 30 – 35 நாட்களாக அவர் எங்கள் அணியுடன் இணைந்து விளையாடினார்”
இதையும் படிங்க: 2 இந்தியர்கள் இருக்காங்க.. இன்றைய தலைமுறையின் 5 சிறந்த ஸ்பின்னர்களை தேர்ந்தெடுத்த.. ரங்கனா ஹெராத்
“அணியின் முதல் வீரர் முதல் 20வது நபர் வரை அனைவரும் ஃபிட்டாக முழு பலத்துடன் இருக்க வேண்டும் என்று அவர் தொடர்ந்து எங்களைத் தள்ளினார். அவரைப் போல் ஒரு தலைமை பயிற்சியாளர் கூட செய்திருக்க மாட்டார் என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறினார். முன்னதாக 2018, 2019 ஐபிஎல் தொடர்களில் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் செயல்பட்டார். இருப்பினும் அவரது தலைமையில் பஞ்சாப் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.