ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் சுமாராக விளையாடி முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறியது. இதுவரை 11 போட்டிகளில் 9 தோல்விகளை சந்தித்துள்ள சென்னை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடுகிறது. இந்தத் தொடர் தோல்விகளுக்கு அந்த அணியின் மோசமான பேட்டிங் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட அந்த அணிக்கு ஆயுஷ் மாத்ரே வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக கிடைத்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த 17 வயது வீரரான அவர் காயமடைந்த ருதுராஜ்க்கு பதிலாக வாங்கப்பட்டார். அந்த வாய்ப்பில் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடிய ஆயுஷ் பலரது கவனத்தை எடுத்தார். அதே வேகத்தில் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் அபாரமாக விளையாடிய அவர் 94 (48) ரன்கள் விளாசி சிஎஸ்கே வெற்றிக்கு முழு மூச்சுடன் போராடினார்.
சூர்யவன்சி மாதிரி வேணாம்:
இருப்பினும் மற்ற வீரர்கள் ஃபினிஷிங் செய்யத் தவறியதால் வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோற்றது. ஆனாலும் சுரேஷ் ரெய்னாவை முந்தி சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அரை சதத்தை அடித்த வீரராக ஆயுஷ் சாதனைப் படைத்தார். அந்தப் போட்டியின் முடிவில் “தோனி என்னைச் சாம்பியன்” என்றழைத்து பாராட்டியதாக ஆயுஷ் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
அதே போல சுரேஷ் ரெய்னாவும் அவரை நேரில் பாராட்டினார். இந்நிலையில் 14 வயதில் மிராட்டி வரும் வைபவ் சூரியவன்சி போல அதிரடியாக இல்லாமல் உன்னுடைய வழியில் விளையாடி சீராக பெரிய ரன்கள் குவித்து வளர வேண்டும் என்று தம்முடைய மகனுக்கு ஆலோசனைக் கொடுத்துள்ளதாக ஆயுஷ் மாத்ரேவின் தந்தை யோகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் தோனி தெரிவித்த பாராட்டு பற்றி மிட்-டே பத்திரிக்கையில் அவர் பேசியது பின்வருமாறு.
அப்பாவின் ஆலோசனை:
“வைபவும் நீயும் வித்தியாசமான பேட்ஸ்மேன்கள் என்று ஆயுஷிடம் சொன்னேன். எனவே அவருடன் உன்னை யாராவது ஒப்பிட்டால் அதைக் கண்டு கொள்ளாதே என்று சொன்னேன். அத்துடன் வைபவ் போல செயல்பட முயற்சிக்காதே அல்லது சதமடிக்க முயற்சிக்காதே என்றும் ஆயுஷிடம் சொன்னேன். ஏனெனில் ஆயுஷ் எந்த அழுத்தத்தையும் எடுத்துக்கொண்டு பெரிய விஷயங்களை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை என நான் நம்புகிறேன்”
இதையும் படிங்க: 155 கி.மீ மயங் யாதவை சமாளிக்க.. ஸ்ரேயாஸ் எடுத்த மாஸ்டர் முடிவு எனக்கே ஆச்சர்யமா இருக்கு.. பாண்டிங் பாராட்டு
“ஆயுஷ் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும். “நன்றாக விளையாடினீர்கள் இதே போல வருங்காலத்திலும் நீங்கள் அசத்த வேண்டும்” என்று தோனி என் மகனிடம் அமைதியாக சொன்னார். அது சில வார்த்தைகளாக இருந்தாலும் என் மகன் பெரியளவில் மதிக்கக்கூடிய தோனி போன்றவரிடம் இருந்து வந்தது மிகப்பெரியது. வருங்காலத்தை முன்னோக்கிச் செல்லும் ஒரு முக்கியமான பொறுப்பை ஒப்படைத்ததன் வாயிலாக ஆயுஷின் திறமையில் தோனி நம்பிக்கை வைத்திருப்பதாக உணர்கிறேன்” எனக் கூறினார்.



