இந்தியாவின் தலைநகர் டெல்லியில் புதிதாக டெல்லி பிரீமியர் லீக் டி20 தொடர் துவங்கப்பட்டுள்ளது. அதில் ஆகஸ்ட் 31ஆம் தேதி மதியம் 2 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானத்தில் 23வது லீக் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் வடக்கு டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் தெற்கு டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணிகள் மோதின. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தெற்கு டெல்லி 20 ஓவரில் 308-5 ரன்கள் குவித்தது.
அந்த அணிக்கு பிரியான்ஸ் ஆர்யா மற்றும் கேப்டன் ஆயுஷ் படோனி ஆகியோர் ஜோடி சேர்ந்து வடக்கு டெல்லி பவுலர்களை அடித்து நொறுக்கினார். குறிப்பாக மனன் பரத்வாஜ் வீசிய 12வது ஓவரில் பிரியான்ஸ் ஆர்யா 6, 6, 6, 6, 6, 6 என அடுத்தடுத்த 6 சிக்ஸர்களை பறக்க விட்டார். அதனால் டி20 கிரிக்கெட்டில் யுவராஜ் சிங்கிற்கு பின் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த 2வது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
மிரட்டல் பேட்டிங்:
அந்த வகையில் பட்டாசாக பேட்டிங் செய்த அவர் 10 பவுண்டரி 10 சிக்சருடன் சதமடித்து 120 (50) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுபுறம் அவருக்கு கொஞ்சமும் சளைக்காமல் அடித்து நொறுக்கிய ஆயுஸ் படோனி சிக்ஸர் மழையை பொழிந்து ருத்ரதாண்டவம் ஆடினார். அந்த வகையில் அதிரடி சரவெடியாக விளையாடிய அவர் 8 பவுண்டரி 19 சிக்சர்களை பறக்க விட்டு சதமடித்து 165 (54) ரன்களை 300 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து ஆட்டமிழந்தார்.
அதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையை உடைத்த அவர் புதிய உலக சாதனை படைத்தார். இதற்கு முன் 2017 பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் கிறிஸ் கெயில் 18 சிக்ஸர்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அது போக டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையும் ஆயுஷ் படோனி படைத்தார்.
ஆயுஷ் படோனி சாதனை:
இதற்கு முன் கடந்த 2019ஆம் ஆண்டு சிக்கிம் அணிக்கு எதிராக ஸ்ரேயாஸ் ஐயர் 147 (55) ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். மேலும் பிரியான்ஸ் ஆர்யா – ஆயுஷ் படோனி ஆகியோர் 2வது விக்கெட்டுக்கு 286 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதனால் ஒரு டி20 போட்டியில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடியாகவும் அவர்கள் உலக சாதனை படைத்தனர்.
இதையும் படிங்க: தொடர்ந்து அசத்தும் சாய் சுதர்ஷன்.. கம்பீர் மற்றும் அகார்கர் ஆகியோருக்கு ஏற்பட்டுள்ள புதிய தலைவலி – விவரம் இதோ
இதற்கு முன் 2024 பிப்ரவரி மாதம் சீனாவுக்கு எதிராக ஜப்பானின் யமமெட்டோ-லெக் மற்றும் கெண்டல் கடோவாகி-பிளெமிங் ஆகியோர் 258 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும். அதன் பின் 309 ரன்களை துரத்திய வடக்கு டெல்லி முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 196-8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக கேப்டன் ப்ரான்சு விஜய்ரன் 62 ரன்கள் எடுத்தார். அதனால் 112 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வடக்கு டெல்லி சார்பில் அதிகபட்சமாக ராகவ் சிங் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.



