IPL 2023 : நான் மட்டும் தனியாளா டெல்லியை தூக்கிட முடியுமா? நீங்களே கொடுத்தாலும் எனக்கு அது வேண்டாம் – அக்சர் படேல் பேட்டி

Axar Patel
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரின் 70 போட்டியில் கொண்ட லீக் சுற்று உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. அதில் முதல் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட டெல்லி 2013க்குப்பின் 10 வருடங்கள் கழித்து முதல் 5 போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறியது. அந்த அணிக்கு ரிசப் பண்ட் காயத்தால் வெளியேறிய நிலையில் 2016 கோப்பையை கேப்டனாக வென்று ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வெளிநாட்டு வீரராக சாதனை படைத்த டேவிட் வார்னர் தலைமை தாங்கியதுடன் ரிக்கி பாண்டிங், சௌரவ் கங்குலி போன்ற ஜாம்பவான்கள் பயிற்சியாளர்களாக உறுதுணையாக இருந்தனர்.

- Advertisement -

அதனால் வெற்றி நடை போடும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி பந்து வீச்சு துறையில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டும் பேட்டிங் துறையில் பிரிதிவி ஷா, மிட்சேல் மார்ஷ், ரிலீ ரோசவ், ரோவ்மன் போவல், மனிஷ் பாண்டே என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆரம்பக்கட்ட போட்டிகளில் குறைந்த ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர். அதனால் பொறுமையாக விளையாட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்ட கேப்டன் டேவிட் வார்னர் பெரிய ரன்களை குறைவான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்ததால் தோல்விக்கான பழியையும் சேவாக் போன்ற முன்னாள் வீரர்களின் விமர்சனங்களையும் வாங்கி கட்டிக் கொண்டார்.

தனியாளா முடியாது:
அப்படி இதர வீரர்கள் சொதப்பியதால் நல்ல பார்மில் இருந்து 268 ரன்களையும் 11 விக்கெட்களையும் எடுத்து சிறந்த ஆல் ரவுண்டராக செயல்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் அக்சர் படேல் போராட்டமும் டெல்லியின் வெற்றிகளுக்கு கை கொடுக்கவில்லை. இருப்பினும் வார்னருக்கு பதிலாக அவர் கேப்டனாக செயல்பட்டால் அது வருங்காலங்களில் இந்தியாவுக்கு நன்மை பயக்கும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் வித்தியாசமான கோரிக்கையை வைத்தார்.

Sunil Gavaskar

இந்நிலையில் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பாதியில் கேப்டனை மாற்றுவது ஏற்கனவே தடுமாறும் அணியை மேலும் சிதைக்கும் என்று தெரிவிக்கும் அக்சர் பட்டேல் பெரும்பாலான வீரர்கள் சொதப்பும் போது தமது தலைமையில் மட்டும் டெல்லி திடீரென வெற்றி பாதையில் நடந்து விடாது என கூறியுள்ளார். எனவே பாதியில் தம்மிடம் கேப்டன்ஷிப் பதவி கொடுக்கப்பட்டிருந்தால் அதை வேண்டாம் என்று தெரிவித்திருப்பேன் எனக் கூறும் அவர் சாதாரண வீரராக விளையாடுவதே போதும் என்ற வகையில் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“தொடர் நடந்து கொண்டிருக்கும் போது பாதியில் நான் எதுவும் சொல்ல மாட்டேன். ஒருவேளை அந்த சமயத்தில் என்னிடம் கேப்டன்ஷிப் பதவி கொடுக்கப்பட்டிருந்தால் கூட அதை நான் வேண்டாம் என்று மறுத்திருப்பேன். ஏனெனில் ஏற்கனவே மோசமான நிலையில் செல்லும் உங்களது அணியை இது போன்ற மாற்றங்கள் மேலும் மோசமாக்கி விடும். அதனால் அது போன்ற மோசமான சூழ்நிலைகளில் நீங்கள் உங்களுடைய வீரர்கள், கேப்டன் போன்றவர்களுக்கு ஆதரவு தான் கொடுக்க வேண்டும்”

axar 1

“ஒருவேளை பாதியில் கேப்டனை மாற்றினால் அது நிச்சயமாக நல்ல செய்தியாக இருக்காது. சொல்லப்போனால் நான் கேப்டனாக இருந்தாலும் இதே நிலைமை தான் நீடிக்கும். ஏனெனில் அனைத்து வீரர்களும் சேர்ந்து அணியாக தோல்வியை சந்தித்த நாங்கள் கேப்டனை மட்டும் குறை சொல்ல முடியாது” என்று கூறினார். அவர் கூறுவது போல ஒரு சீசனில் பெரும்பாலான வீரர்கள் சுமாராக செயல்படும் போது கேப்டனை மாற்றுவது நிச்சயமாக திடீர் வெற்றியை கொடுத்து விடாது.

இதையும் படிங்க:DC vs CSK : எந்த வேடத்தில் வந்தாலும் அடிப்போம், டெல்லியை முதல் அணியாக வீழ்த்திய சிஎஸ்கே – பிளே ஆஃப்’க்கு சென்று மாஸ் கம்பேக்

எடுத்துக்காட்டாக கடந்த வருடம் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரவிந்திர ஜடேஜா தலைமையில் சென்னை ஆரம்பத்திலேயே தொடர் தோல்விகளை சந்தித்தது. அதனால் ஒரு கட்டத்திற்கு பின் அவருக்கு பதிலாக மீண்டும் கேப்டனாக தோனி பதவியேற்றும் அந்த அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியவில்லை. மேலும் நல்ல ஃபார்மில் அசத்திய ஜடேஜா கேப்டன்ஷிப் அழுத்தம் காரணமாக திணறினார். அது போல தற்போது நன்றாக அசத்தும் அக்சர் பட்டேல் கேப்டனாக இருப்பதை விட சாதாரண வீரராக விளையாடுவதே சிறப்பானது என்று சொல்லலாம்.

Advertisement