IND vs WI : அட்டகமாக ஆடிய அக்சர் படேல் – இந்தியாவுக்கு வெற்றியை பரிசளித்து கபில் தேவுக்கு பின் தோனியை முந்தி அபார சாதனை

Axar Patel IND vs WI
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 2-வது போட்டி ஜூலை 24 இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 311/6 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு 65 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த கெய்ல் மேயர்ஸ் – சாய் ஹோப் ஜோடியில் மேயர்ஸ் 39 (23) ரன்களில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய சமர் ப்ரூக்ஸ் தனது பங்கிற்கு 35 (36) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்ததாக வந்த பிரண்டன் கிங் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

அதனால் 130/3 என தடுமாறிய தனது அணியை அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் நிக்கோலஸ் பூரன் பொறுப்புடன் பேட்டிங் செய்து 4-வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப் உடன் சேர்ந்து 117 ரன்கள் சூப்பரான பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு மீட்டெடுத்தார். 1 பவுண்டரி 6 சிக்சருடன் 74 (77) ரன்களில் ஆட்டமிழந்த அவருக்குப்பின் களமிறங்கிய ரோவ்மன் போவல் 13 (10) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக இந்திய பவுலர்களை எதிர்கொண்ட ஹோப் 8 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்து 115 (135) ரன்கள் விளாசி 49-வது ஓவரில் அவுட்டானார். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

தடுமாறிய இந்தியா:
அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு 48 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த தொடக்க ஜோடியில் கேப்டன் ஷிகர் தவான் தடுமாறி 13 (10) ரன்களில் அவுட்டாக அடுத்த சில ஓவர்களில் சிறப்பாக செயல்பட்ட சுப்மன் கில் 43 (49) ரன்களில் அவுட்டானார். அப்போது களமிறங்கிய சூரியகுமார் யாதவ் 9 (8) ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்ததால் 79/3 என தடுமாறிய இந்தியாவை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஷ்ரேயஸ் ஐயர் – சஞ்சு சாம்சன் ஜோடி மிடில் ஓவர்களில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து 4-வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது.

அதில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 63 (71) ரன்களில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்க அடுத்த சில ஓவர்களில் 3 பவுண்டரி 3 சிக்சருடன் தனது முதல் அரை சதத்தை அடித்த சஞ்சு சாம்சன் 54 (51) ரன்களில் அவுட்டானார். அதனால் 205/5 என்ற நிலையில் ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா – அக்சர் படேல் அதிரடியாக ரன்களை குவிக்க தொடங்கி 6-ஆவது விக்கெட்டுக்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தபோது 33 (36) ரன்களில் தீபக் ஹூடா ஆட்டமிழந்தார்.

- Advertisement -

மிரட்டிய அக்சர்:
இருப்பினும் அதிரடியை குறைக்காமல் அக்சர் பட்டேல் பேட்டிங் செய்த நிலையில் எதிர்ப்புறம் வந்த ஷார்துல் தாகூர் 3 (6) ரன்களிலும் ஆவேஷ் கான் 10 (12) ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றினர். அதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டபோது கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 தேவைப்பட்டது. கெய்ல் மேயர்ஸ் வீசிய அந்த ஓவரின் 2-வது பந்தில் சிங்கிள் எடுத்த அக்சர் பட்டேலிடம் 3-வது பந்தில் சிங்கிள் எடுத்து சிராஜ் ஸ்ட்ரைக் கொடுத்தார். அப்போது கடைசி 3 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்ட போது மெகா சிக்ஸர் பறக்க விட்ட அக்சர் படேல் இந்தியாவை 49.4 ஓவரில் 312/8 ரன்கள் எடுக்க வைத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

முன்னதாக முதல் போட்டியிலும் 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற இந்தியா இந்த வெற்றியால் 2 – 0* (3) என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது. இந்த வெற்றிக்கு கடைசி 74 பந்துகளில் 114 ரன்கள் தேவைப்பட்ட போது டி20 இன்னிங்ஸ் போல 3 பவுண்டரி 5 மெகா சிக்ஸருடன் தனது முதல் அரை சதத்தை அடித்து 64* (35) ரன்களை 182.86 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் தெறிக்கவிட்ட அக்சர் பட்டேல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

அபார சாதனைகள்:
இப்போட்டியில் 27 பந்துகளில் அரைசதம் அடித்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிவேகமாக சதமடித்த 2-வது இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. கபில் தேவ் : 22 பந்துகள், அல்பியன், 1983
2. அக்சர் படேல் : 27, குயின்ஸ் பார்க், 2022*

மேலும் இப்போட்டியில் 5 சிக்சர்களை பறக்கவிட்ட ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட போட்டிகளில் 7-வது இடம் அல்லது அதற்கு கீழ் வரிசையில் களமிறங்கி அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற புதிய சாதனை படைத்தார். அந்தப் பட்டியல்:
1. அக்சர் படேல் : 5, 2022*
2. எம்எஸ் தோனி : 3, ஜிம்பாப்வேக்கு எதிராக, 2005
3. யூசுப் பதான் : 3, அயர்லாந்துக்கு எதிராக, 2011
4. யூசுப் பதான் : 3, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2011

இதையும் படிங்க: IND vs WI : வெ.இண்டீஸை மீண்டும் மண்ணை கவ்வ வைத்த இந்தியா – ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய உலகசாதனை படைத்து அபாரம்

அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட போட்டியில் 7-வது இடம் அல்லது அதற்கு கீழ் வரிசையில் களமிறங்கி அதிகபட்ச ஸ்கோர் (64*) பதிவு செய்த இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையும் அவர் பெற்றார். அத்துடன் சச்சினுக்கு பின் (57* & 1 விக்கெட், 2005) வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்த ஒருநாள் போட்டியில் அரைசதம் மற்றும் 1 விக்கெட் எடுத்த இந்திய வீரர் (64* & 1 விக்கெட்) என்ற பெருமையும் பெற்றார்.

Advertisement