சூப்பர் 4 சுற்றில் பாரத்தை கொடுக்கும் அவரை நீக்குங்க – இந்திய பவுலிங்கில் மாற்றத்தை செய்ய டேனிஷ் கனேரியா வேண்டுகோள்

Danish-Kaneria-and-Rohit
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2022 தொடரில் ரோகித் சர்மா தலைமையில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் இந்தியா தனது 2 லீக் போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. முதலில் பரம எதிரியான பாகிஸ்தானை போராடி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து அதே துபாய் மைதானத்தில் கடந்த வருடம் உலகக்கோப்பையில் முதல் முறையாக பரிசளித்த தோல்விக்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா ஹாங்காங்க்கு எதிராக 40 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த தொடரில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய 2 முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தால் விலகியதால் இதர பவுலர்கள் முடிந்தளவுக்கு பொறுப்புடன் செயல்பட்டு வெற்றிக்காக போராடி வருகிறார்கள்.

Avesh Khan Virat Kohli KL rahul Chahal India

- Advertisement -

ஆனால் காயமடைந்த அவர்களுக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் ரன்களை வாரி வழங்கும் வள்ளலாக செயல்படுவது இந்தியாவுக்கும் இதர பவுலர்களுக்கும் அழுத்தத்தையும் கொடுக்கிறது என்றே கூறலாம். கடந்த பிப்ரவரி மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சொந்த மண்ணில் அறிமுகமாகி ஐபிஎல் 2022 தொடரில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டதால் அதன்பின் நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு பெற்ற இவர் இதுவரை எந்த ஒரு போட்டியிலும் துல்லியமாக பந்துவீசியதே கிடையாது.

ரன் மெஷின் பவுலர்:
அந்த வகையில் 147 ரன்களுக்கு பாகிஸ்தானை சுருட்டிய தரமான இந்திய பவுலர்களுக்கு மத்தியில் வெறும் 2 ஓவரில் 19 ரன்களை 9.50 என்ற மோசமான எக்கனாமியில் பந்து வீசிய இவர் கத்துக்குட்டியான ஹாங்காங்க்கு எதிராக ஒரு படி மேலே சென்று 4 ஓவர்களில் அரைசதம் அடித்து 53 ரன்களை 13.25 என்ற படுமோசமான எக்கனாமியில் வீசினார். இப்படி ஹாங்காங் பேட்ஸ்மேன்களே சரமாரியாக அடிக்கும் அளவுக்கு மோசமான பவுலராக இருக்கும் இவரை அசோக் திண்டாவின் அடுத்த வாரிசு என விமர்சிக்கும் ரசிகர்கள் வரும் போட்டிகளில் அதிரடியாக நீக்க வேண்டுமென்று வலுவான கோரிக்கை வைத்துள்ளனர்.

Avesh-Khan-2

இந்நிலையில் புவனேஸ்வர் குமார் போன்ற சிறப்பாக பந்து வீசும் பவுலர்களுக்கும் அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் ஆவேஷ் கானை நீக்க வேண்டும் என இந்திய நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ள முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா முக்கியமான சூப்பர் 4 சுற்றுக்கு முன்பாக தடுமாறும் சஹாலை சீனியர் என்று பார்க்காமல் ரவி பிஷ்னோய்க்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்திய பவுலிங் மிகவும் கவலையாக மாறியுள்ளது. குறிப்பாக ஆவேஷ் கான் ஒவ்வொரு போட்டியிலும் ஏராளமான ரன்களை வழங்குகிறார். ஒருவேளை ஹாங்காங்க்கு எதிரான போட்டி போல் அரஷ்தீப் சிங்க்கும் ரன்களை வழங்க்கும் போது மொத்த அழுத்தமும் பாரமும் புவனேஸ்வர் குமார் மீது விழுகிறது. அதேபோல் சாஹலும் தன்னுடைய நுணுக்கங்களை வெற்றிகரமாக செயல்படுத்த முடியாமல் தவிக்கிறார். அவரால் அதிகமான லெக் ஸ்பின் பந்துகளை வீச முடியாவிட்டால் அவருக்கு பதில் ரவி பிஷ்னோய்க்கு வாய்ப்பு கொடுங்கள். துபாய் போன்ற மைதானத்தில் காற்றில் வேகமாக வீசும் திறமை பெற்றுள்ள அவர் பயனை ஏற்படுத்துவார்” என்று கூறினார்.

Kaneria

அதேபோல் ஹாங்காங் எதிரான போட்டியில் பணிச்சுமை காரணமாக ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வளிக்கப்பட்டதை வரவேற்கும் அவர் அதற்காக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டது சரியான முடிவல்ல என்று கூறியுள்ளார். ஒரு ஆல்-ரவுண்டரை நீக்கும் போது தீபக் ஹூடா போன்ற ஆல்-ரவுண்டரை தான் தேர்வு செய்திருக்க வேண்டும் என்று கூறியுள்ள அவர் தினேஷ் கார்த்திக் மீது நம்பிக்கை இல்லாமல் ரிஷப் பண்ட்டை அணி நிர்வாகம் தேர்வு செய்வது எந்த பயனையும் அளிக்காது என்று விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் பேசியது வருமாறு.

“விரைவில் டி20 உலகக் கோப்பை வருவதால் ஹர்திக் பாண்டியாவின் பணிச்சுமையை நிர்வகிப்பது முக்கியமானதாகும். நீங்கள் தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பண்ட் ஆகியோரில் யாருக்கு வேண்டுமானாலும் வாய்ப்பு கொடுங்கள். ஆனால் ஒருவருக்கு மட்டும் நிலையான வாய்ப்பு கொடுங்கள். அதேபோல் நானாக இருந்தால் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு கொடுக்கும் போது தீபக் ஹூடாவுக்கு வாய்ப்பு கொடுப்பேன். ஏனெனில் அவர் பந்துவீச்சில் நிறைய வித்தியாசங்களை ஏற்படுத்துவார்” என்று கூறினார்.

Advertisement