விராட் கோலி இல்ல, ஆஸ்திரேலியர்களுக்கு அவரை கண்டாலே பிடிக்காது – இந்திய வீரரை வெறுப்புடன் பாராட்டும் ஜோஸ் ஹேசல்வுட்

hazlewood 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் செட்டேஸ்வர் புஜாரா கடந்த 2010ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி மிகவும் மெதுவாக பேட்டிங் செய்பவராக தன்னை அடையாளப்படுத்தினார். அதனால் 5 போட்டியுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் வாய்ப்பை இழந்தாலும் பொறுமையுடன் விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரும்பாலான போட்டிகளில் பொறுமையின் சிகரமாக களத்தில் நங்கூரமாக நின்று அதிக பந்துகளை எதிர்கொண்டு எதிரணி பவுலர்களை களைப்படைய வைத்து பெரிய ரன்களை குவிக்கும் ஸ்டைலை பின்பற்றும் அவர் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்து வருகிறார்.

குறிப்பாக ஜாம்பவான் ராகுல் டிராவிட் ஓய்வுக்கு பின் அவரது இடத்தை அவரைப்போலவே பொறுமையாக விளையாடும் நிரப்பி வரும் புஜாரா இதுவரை 102 டெஸ்ட் போட்டிகளில் 7154 ரன்களை குவித்து நவீன கிரிக்கெட்டின் மிகச்சிறந்த டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட் வீரராக தன்னை நிரூபித்துள்ளார். இதுவரை அவர் நிறைய அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடியிருந்தாலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிம்ம சொப்பனமாக விளையாடியுள்ளார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

ஆஸ்திரேலியர்களுக்கு பிடிக்காது:
ஏனெனில் 2018/19 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் அற்புதமாக செயல்பட்டு 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த அவர் விராட் கோலி தலைமையில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணியாக இந்தியா வரலாறு படைப்பதற்கு முக்கிய பங்காற்றி தொடர் நாயகன் விருது வென்றார். அதே போல் 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் பெரிய ரன்களை எடுக்கவில்லை என்றாலும் சிட்னி, காபா ஆகிய போட்டிகளில் பாறையை போல் நின்று ஹேசல்வுட், ஸ்டார்க் போன்ற ஆஸ்திரேலிய பவுலர்கள் வீசிய அதிரடியான வேகப்பந்துகளை தன்னுடைய உடம்பில் அடியாக வாங்கி முக்கிய ரன்களை எடுத்த அவர் மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பையை வெல்ல துருப்புச் சீட்டாக செயல்பட்டார்.

அந்த தொடரில் புஜாராவுக்கு பந்து வீசி அலுத்துப் போய்விட்டதாக ஹேசல்வுட் சொன்னதை மறக்கவே முடியாது. இந்நிலையில் எப்போதுமே தங்களுக்கு எதிராக சவாலாக இருக்கக்கூடிய விராட் கோலியை விட புஜாராவை ஆஸ்திரேலியர்கள் வெறுப்போம் என்று ஜோஸ் ஹேசல்வுட் தெரிவித்துள்ளார். ஏனெனில் அவருடைய விக்கெட்டை எடுப்பதற்கு கடினமாக உழைக்க வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஆர்சிபி இணையத்தில் வெறுப்பு கலந்த அன்புடன் பாராட்டி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்திய அணியில் எங்களுக்கு பிடிக்காத ஒரு வீரர் என்றால் புஜாராவின் பெயர் தான் முதலில் நினைவுக்கு வரும். ஏனெனில் அவர் அவுட்டாவதை வெறுப்பவர். எனவே பவுலர்கள் அவருடைய விக்கெட்டை எடுப்பது மிகப்பெரிய திரில்லர் என்று நினைக்கிறேன். அவருடைய விக்கெட்டை நீங்கள் எடுத்துள்ளீர்கள் என்றால் அதற்காக நீங்கள் கடினமாக உழைத்து அதற்கான பரிசை பெற்றுள்ளீர்கள் என்று அர்த்தம். அவர் பல ஆண்டுகளாக குறிப்பாக ஆஸ்திரேலியாவில் எங்களுக்கு எதிராக பெரிய சண்டைகளை எதிர்கொண்டவர்”

“அதனாலேயே ஆஸ்திரேலியர்கள் வெறுக்க விரும்பும் ஒருவராக அவர் இருக்கிறார். இருப்பினும் அவர் அற்புதமான வீரர். அது தான் டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு பகுதி என்று நான் நினைக்கிறேன். அவரை நீங்கள் அவுட்டாக்கி விட்டீர்கள் என்றாலே பரிசை பெற்றதாக அர்த்தம்” என்று கூறினார். அந்த வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எப்போதும் சவாலை கொடுத்து வரும் புஜாரா அடுத்ததாக ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் மீண்டும் அந்த அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு முதல் கோப்பையை வென்று கொடுக்க இப்போதே தயாராக உள்ளார்.

இதையும் படிங்க:அதை நெனச்சா சிரிப்பா இருக்கு, 2019இல் விமர்சித்த ஸ்ரீகாந்த்துக்கு கலீல் அஹமது பதிலடி – நடந்தது என்ன

ஏனெனில் டெஸ்ட் ஸ்பெசலிஸ்டான அவரை எந்த ஐபிஎல் அணியும் வாங்காத நிலையில் ஒரு மாதம் முன்னதாகவே இங்கிலாந்துக்கு பயணித்து தேவையான பயிற்சிகளில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் காயத்தால் பங்கேற்காத ஹேசல்வுட் 2023 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடுவது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்தியாவுக்கு எதிராக லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாடுவதற்கு அவர் குணமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement