
வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் 2025/26 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. அத்தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதனால் தொடரை வெல்ல 3வது போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்துக்கு இங்கிலாந்து தள்ளப்பட்டது. அந்த சூழ்நிலையில் டிசம்பர் 16ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் துவங்கிய 3வது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 371 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி தனது முதல் ஆஷஸ் சதத்தை அடித்து 106, உஸ்மான் கவாஜா 82, மிட்சேல் ஸ்டார்க் 54 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜோப்ரா ஆர்ச்சர் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து மீண்டும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 286 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 83, ஜோப்ரா ஆர்ச்சர் 51, ஹாரி ப்ரூக் 45 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ், ஸ்காட் போலண்ட் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதன் பின் 85 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய ஆஸ்திரேலியா தங்களது 2வது இன்னிங்ஸ் 349 ரன்களை குவித்து அசத்தியது.
அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் சதத்தை அடித்து 170, அலெக்ஸ் கேரி 72 ரன்கள் குவித்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜோஸ் டாங் 4 விக்கெட்டுகளை எடுத்தார். இறுதியாக 435 என்ற மெகா இலக்கைத் துரத்திய இங்கிலாந்து முடிந்தளவு போராடியும் 352 ரன்கள் மட்டுமே எடுத்து மீண்டும் தோல்வியைச் சந்தித்தது. அந்த அணிக்கு பென் டக்கெட் 4, ஓலி போப் 17, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.
அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 85, ஜேமி ஸ்மித் 60, வில் ஜேக்ஸ் 47, பிரைடன் கார்ஸ் 39*, ஜோ ரூட் 39, ஹாரி ப்ரூக் 30 ரன்கள் எடுத்தும் ஹாட்ரிக் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக இம்முறை பஸ்பால் அணுகுமுறையில் விளையாடி ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து கோப்பையை வெல்வோம் என்று இங்கிலாந்தினார் சொன்னார்கள். ஆனால் அதற்குத் தகுந்தார் போல் விளையாடாத இங்கிலாந்து வெறும் 11 நாட்களிலேயே ஹாட்ரிக் தோல்வியைச் சந்தித்தது.
இதையும் படிங்க: இதுக்காக அகர்கரை பாராட்ட ஒன்னுமில்ல.. இங்கிலாந்தில் பாத்து செஞ்ச தப்பை திருத்திருக்காரு.. சஞ்சய் மஞ்ரேக்கர்
இதையும் சேர்த்து 2010/11க்குப்பின் தொடர்ந்து 15வது வருடமாக ஆஸ்திரேலிய மண்ணில் வெறும் ஒரு ஆஷஸ் போட்டியைக் கூட வெல்ல முடியாமல் இங்கிலாந்து அவமானத்தைச் சந்தித்துள்ளது. மறுபுறம் 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 3 – 0* (5) என்ற கணக்கில் ஆஷஸ் கோப்பையை ஆரம்பத்திலேயே வென்று தங்களை சொந்த மண்ணில் கில்லி என்பதை நிரூபித்துள்ளது. அந்த அணிக்கு அதிகபட்சமாக நேதன் லயன், கேப்டன் பட் கமின்ஸ், மிட்சேல் ஸ்டார்க் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.