AUS vs RSA : 17 வருடத்துக்குப்பின் தெ.ஆ’வை சாய்த்த ஆஸ்திரேலியா வரலாற்று வெற்றி – உதயமான இந்தியாவின் வாய்ப்பு

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்கா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் டிசம்பர் 26ஆம் தேதியன்று புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய ஆஸ்திரேலியாவிடம் பெட்டி பாம்பாக அடங்கிய தென்னாப்பிரிக்கா 189 ரன்களுக்கு சுருண்டது.

டீன் எல்கர் 26, எர்வீ 18, பவுமா 1 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான அந்த அணிக்கு அதிகபட்சமாக கெய்ல் வெரின் 52 ரன்களும் மார்கோ யான்சென் 59 ரன்களும் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு உஸ்மான் கவாஜா 1, மார்னஸ் லபுஸ்ஷேன் 14 என டாப் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் 3வது விக்கெட்டுக்கு 239 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்கள் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

வரலாற்று வெற்றி:
ஆனால் அவருடன் அட்டகாசமாக பேட்டிங் செய்த நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் வார்னர் 2020 ஜனவரிக்குப் பின் முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் சதமடித்து தன்னுடைய விமர்சனங்களை அடித்து நொறுக்கினார். மேலும் தன்னுடைய 100வது போட்டியில் 16 பவுண்டரி 2 சிக்சருடன் 200 ரன்கள் விளாசிய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய 100வது போட்டியில் இரட்டை சதமடித்த முதல் ஆஸ்திரேலியா வீரர் என்ற சாதனையுடன் ரிட்டையர்ட் ஹர்ட்டாகி சென்றார்.

அவருக்குப்பின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி அருமையாக பேட்டிங் செய்து சதமடித்து 111 ரன்களும் டிராவிஸ் ஹெட் 51 ரன்களும் கேமரூன் கிரீன் 51* ரன்களும் குவித்து அசத்தியதால் 575/8 ரன்களில் ஆஸ்திரேலியா தங்களது இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாக அறிவித்தது. தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக அன்றிச் நோர்ட்ஜெ 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து 386 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய தென்னாபிரிக்கா மீண்டும் ஆஸ்திரேலியாவின் கட்டுக்கோப்பான பந்து வீச்சில் வெறும் 204 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

அந்த அணிக்கு கேப்டன் டீன் எல்கர் 0, எர்வீ 21, டீ ப்ருயன் 28, ஜூண்டோ 1, கெய்ல் வெரின் 33 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் அதிகபட்சமாக தெம்பா பவுமா 65 ரன்கள் எடுத்தார். அந்தளவுக்கு பந்து வீச்சில் மீண்டும் அசத்திய ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேதன் லையன் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதனால் இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை சுவைத்த ஆஸ்திரேலியா 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இத்தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

குறிப்பாக 8 வருடங்களுக்குப் பின் முதல் முறையாக தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரை வென்று ஆஸ்திரேலியா நிம்மதி அடைந்துள்ளது. கடைசியாக கடந்த 2013/14இல் தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்திருந்த ஆஸ்திரேலியா 2016/17 மற்றும் 2017/18 ஆகிய ஆண்டுகளில் முறையே 2 – 1 (3) மற்றும் 3 – 1 (4) என்ற கணக்கில் தோற்றது. அதை விட சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 17 வருடங்கள் கழித்து முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வென்றுள்ள ஆஸ்திரேலியா மோசமான வரலாற்றை மாற்றி எழுதி கோப்பையை வென்றுள்ளது.

- Advertisement -

கடைசியாக கடந்த 2005ஆம் ஆண்டு தான் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2 – 0 (3) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றிருந்தது. முன்னதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரை இரு அணிகளுமே வெல்ல வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கின. அதில் முதல் போட்டியில் தோற்ற தென்னாபிரிக்கா 2வது இடத்திலிருந்து 3வது இடத்திற்கு சரிந்த நிலையில் இந்த தோல்வியால் 50% புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு சரிந்துள்ளது.

இதையும் படிங்கநீங்க வேனா பாருங்க. அந்த பையன் இந்திய அணியில் விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பான் – சபா கரீம் உறுதி

மறுபுறம் 4வது இடத்திலிருந்த இந்தியா வங்கதேச டெஸ்ட் தொடரை வென்று 58.93% புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் காரணமாக வரும் பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை 1 – 0 (4) என்ற குறைந்தபட்ச கணக்கில் வென்றால் கூட போதும் 2023 ஜூன் மாதம் நடைபெறும் பைனலுக்கு தகுதி பெற்று விடலாம் என்ற பிரகாசமான நிலைமைக்கு இந்தியா வந்துள்ளது. அத்துடன் அந்த பைனலில் முதலிடத்தில் (78.57%) உள்ள ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா மோதுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

Advertisement