2003 மாதிரி 450 ரன்கள் அடிச்சு இந்தியாவை 65 ரன்களுக்கு சுருட்டி 2023 உ.கோ வெல்வோம் – பிரபல ஆஸி வீரர் அதிரடி பேட்டி

IND vs AUS Siraj Shami Marsh Head
- Advertisement -

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. என்ன தான் டி20 உலக கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் வந்தாலும் சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை இந்த 50 ஓவர் உலகக் கோப்பை தீர்மானிக்கிறது. அதன் காரணமாக ஐபிஎல் உட்பட உலகம் முழுவதிலும் எத்தனை டி20 தொடர்கள் நடைபெற்றாலும் இந்த உலக கோப்பைக்கு அன்றும் இன்றும் எப்போதுமே தனித்துவமான தரமும் ரசிகர்களிடம் குறையாத மவுசும் காணப்படுகிறது.

அதில் எப்போதுமே சொந்த மண்ணில் அபாரமாக செயல்பட்டு எதிரணிகளை தெறிக்க விடும் அணியாக கருதப்படும் இந்தியா 2011க்குப்பின் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடைசியாக 2011இல் சொந்த மண்ணில் எம்எஸ் தோனி தலைமையில் கோப்பையை வென்றிருந்த இந்தியா அதன் பின் சந்தித்து வரும் தொடர் தோல்விகளுக்கு இம்முறை சொந்த மண் சாதகத்தை பயன்படுத்தி ரோகித் சர்மா தலைமையில் சரித்திரம் படைக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் அதற்கு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அணிகள் சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

2003 போல அடிப்போம்:
குறிப்பாக நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து சமீப காலங்களாகவே உலகின் அனைத்து இடங்களிலும் அதிரடியாக 300 – 350 ரன்களை எடுத்து மிரட்டலாக செயல்பட்டு வருகிறது. அதை விட 1987இல் இந்திய மண்ணில் முதல் முறையாக நடைபெற்ற உலகக் கோப்பையை வென்று 1999, 2003, 2007, 2015 ஆகிய 5 வருடங்களில் சாம்பியன் பட்டங்களை வென்று அசுரனாக திகழும் ஆஸ்திரேலியா எப்போதுமே இந்தியாவுக்கு பெரிய சவாலாக இருக்கும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. அத்துடன் உலகக் கோப்பை போன்ற பெரிய தொடரை இந்தியா வெல்ல வேண்டுமெனில் முதலில் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க வேண்டும் என்று கௌதம் கம்பீர் அடிக்கடி கூறுவார்.

அதற்கேற்றார் போல் 2023 ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடைபெற்றாலும் ஒரு பக்கம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் வயிற்றில் புளியை கரைத்துக் கொண்டே இருக்கிறது. ஏனெனில் இத்தொடரில் விளையாடும் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு வீரர்கள் இந்திய வீரர்களுடன் இணைந்து விளையாடி அவர்களுடைய பலம் பலவீனங்களை தெரிந்து கொள்வதுடன் இந்திய கால சூழ்நிலைகளில் அசத்துவதற்கு நன்றாக பழகி வருகின்றனர். அதனால் உலக கோப்பைக்கு தயாராகும் வெளிநாட்டு வீரர்கள் அந்த அனுபவங்களை வைத்து அக்டோபரில் இந்தியாவை அவர்கள் அடித்து நொறுக்கப் போகிறார்கள் என்ற பயம் இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் உலகக்கோப்பை வரலாற்றில் எந்த ஃபைனலிலும் ஆஸ்திரேலியா தோற்றதில்லை என்று நட்சத்திர வீரர் மிட்சேல் மார்ஷ் கூறியுள்ளார். அந்த வகையில் 2003 உலகக்கோப்பை போல இந்த வருடமும் லீக் மற்றும் நாக் அவுட்டில் அசத்தி இந்தியாவை அதன் சொந்த மண்ணில் ஃபைனலில் எதிர்கொண்டு 450 ரன்கள் குவித்து பின்னர் 65 ரன்களுக்கு சுருட்டி வெற்றி காண்போம் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இணையத்தில் பேசியது பின்வருமாறு.

“ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்து இதுவரை உலகக் கோப்பை வரலாற்றின் ஃபைனல்களில் தோற்காமல் இருக்கும் வெற்றி நடையை ஆஸ்திரேலியா தொடரும். என்னைப் பொறுத்த வரை ஆஸ்திரேலியா ஃபைனலில் 450/2 ரன்கள் அடித்து இந்தியாவை 65 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கும்” என்று கூறினார். முன்னதாக தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 2003 உலகக்கோப்பையில் லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்ததை தவிர்த்து ஏனைய போட்டிகளில் அசத்திய கங்குலி தலைமையிலான இந்தியா ஃபைனலுக்கு முன்னேறியது.

- Advertisement -

ஆனால் அந்த ஃபைனலில் கில்கிறிஸ்ட் 57, ஹெய்டன் 37, கேப்டன் பாண்டிங் 140*, மார்ட்டின் 88* என முக்கிய வீரர்களின் அதிரடியால் இந்தியாவை சரமாரியாக அடித்து நொறுக்கி ஆஸ்திரேலியா 359/2 ரன்கள் குவித்தது. அதை துரத்திய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே சச்சின் 4 ரன்களில் அவுட்டாக சேவாக் மட்டும் அதிரடியாக 82 ரன்கள் விளாசி ரன் அவுட்டானதால் இறுதியில் டிராவிட் 47 ரன்கள் எடுத்தும் வெற்றி பெற முடியவில்லை.

இதையும் படிங்க: IPL 2023 : போராடி கலங்கிய அர்ஷிதீப் – தோனி, மில்லர் உட்பட எந்த ஃபினிஷரும் செய்யாத மாஸ் சாதனை படைத்த ரிங்கு சிங்

அதனால் 125 ரன்கள் வித்தியாசத்தில் அன்றைய நாளில் சந்தித்த படுதோல்வியை இன்னும் 90 கிட்ஸ் இந்திய ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள். அதே போல இந்தியாவை இம்முறையும் அடிப்போம் என்று மிட்சேல் மார்ஷ் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement