IPL 2023 : போராடி கலங்கிய அர்ஷிதீப் – தோனி, மில்லர் உட்பட எந்த ஃபினிஷரும் செய்யாத மாஸ் சாதனை படைத்த ரிங்கு சிங்

- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 8ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெற்ற 53வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தங்களுடைய 5வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவர்களில் 179/7 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 57 (47) ரன்களும் ஜிதேஷ் சர்மா மற்றும் ஷாருக்கான் ஆகியோர் தலா 21 ரன்களும் எடுக்க கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து 180 ரன்களை துரத்திய கொல்கத்தாவுக்கு ரஹ்மத்துல்லா குர்பாஸ் 38, ஜேசன் ராய் 38 (24) என தொடக்க வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய நிலையில் 3வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் மெதுவாகவே விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 11 (13) ரன்களில் அவுட்டாகி அழுத்தத்தை உண்டாக்கினார். போதாக்குறைக்கு அவருடன் மறுபுறம் சற்று அதிரடி காட்டிய கேப்டன் நித்திஷ் ராணா 51 (38) ரன்களில் ஆட்டமிழந்ததால் கடைசி 28 பந்துகளில் கொல்கத்தாவின் வெற்றிக்கு 56 ரன்கள் தேவைப்பட்டது.

- Advertisement -

மீண்டும் ஹீரோவான ரிங்கு:
அப்போது களமிறங்கிய ரசல் தனது பாணியில் 3 பவுண்டரி 3 சிக்ஸ்ரை பறக்க விட்டதால் வெற்றியை நெருங்கிய கொல்கத்தாவுக்கு கடைசி ஓவரில் வெறும் 6 ரன்கள் தேவைப்பட்ட போது முழு மூச்சுடன் போராடிய அர்ஷிதீப் 0, 1, 1, 2 என முதல் 4 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து 5வது பந்தில் ரன் அவுட் செய்தார். ஆனால் கடைசி பந்தில் வெறும் 2 ரன்கள் தேவைப்பட்ட போது யார்க்கர் வீச முயற்சித்து ஃ புல் டாஸ் போட்ட அவரை பவுண்டரியாக பறக்க விட்ட ரிங்கு சிங் 21* (10) ரன்கள் விளாசி கொல்கத்தாவுக்கு த்ரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

அதனால் வெறும் 6 ரன்களை கிட்டத்தட்ட கட்டுப்படுத்தி பஞ்சாப்பை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு வந்த அர்ஷிதீப் மனமுடைந்து கண்ணீர் விடாத குறையாக களத்திலேயே அமர்ந்து ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் ஏற்கனவே இந்த சீசனில் குஜராத்துக்கு எதிராக கடைசி 5 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்ட போது அடுத்தடுத்து 5 சிக்சர்களை தெறிக்க விட்டு நம்ப முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்த ரிங்கு இப்போட்டியில் கடைசி பந்தில் வெறும் 2 ரன்கள் எடுக்க மாட்டேனா என்ற வகையில் பவுண்டரியை விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்து வெற்றியை துள்ளி குதித்துக் கொண்டாடினார்.

- Advertisement -

அப்படி இந்த சீசனில் குஜராத்துக்கு எதிராக கடைசிப் பந்தில் வெற்றி பெற வைத்த அவர் இந்த போட்டியிலும் கடைசி பந்தில் கொல்கத்தாவை வெற்றி பெற வைத்தார். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் 2 வெவ்வேறு போட்டிகளின் கடைசி பந்தில் வெற்றி பெறும் ரன்களை அடித்த முதல் வீரர் என்ற சிறப்பான சாதனையும் ரிங்கு சிங் படைத்துள்ளார்.

இதற்கு முன் தோனி 4 முறையும், ரோகித் சர்மா 3 முறையும், ஜடேஜா மற்றும் ஜேம்ஸ் பல்க்னர் தலா 2 முறையும் ராயுடு, சவுரப் திவாரி, ட்வயன் பிராவோ, மிட்சேல் சாட்னர், நிக்கோலஸ் பூரான், கேஎஸ் பரத், ராகுல் திவாடியா, ரஷித் கான், அப்துல் சமத்* ஆகியோர் தலா 1 முறையும் ஐபிஎல் வரலாற்றில் கடைசி பந்தில் சிக்ஸர் அல்லது பவுண்டரி அல்லது 3, 2, 1 ரன்களை அடித்து வெற்றி பெற வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:KKR vs PBKS : இந்த வருஷம் கொல்கத்தா அணிக்கு புதிய பினிஷர் கிடைச்சி இருக்காரு – ஆட்டநாயகன் ரசல் ஓபன்டாக்

ஆனால் அதில் ரோகித், தோனி, ஜடேஜா போன்றவர்கள் வெவ்வேறு சீசன்களில் நடைபெற்ற போட்டிகளின் கடைசி பந்தில் அடித்த நிலையில் மற்ற யாரும் ஒரே சீசனில் 2 முறை அடித்ததில்லை. ரிங்கு சிங் மட்டுமே ஒரே சீசனில் 2 முறை கடைசிப் பந்தில் வெற்றி பெறும் ரன்களை அடித்த முதல் வீரராக சாதனை படைத்துள்ளார். அப்படி லேட்டஸ்ட் நம்பிக்கை நட்சத்திரமாகவும் பினிஷராகவும் உருவெடுத்துள்ள அவர் மீண்டும் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

Advertisement