WTC Final : இந்தியாவை வெச்சு செஞ்சு பழி தீர்த்த ஆஸ்திரேலியா – 2017 முதல் சந்தித்த அவமான தோல்விகளுக்கு மாஸ் பதிலடி

- Advertisement -

இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வந்த 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டியில் இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை முதல் முறையாக வென்று சாதனை படைத்தது. அந்தப் போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற முதலில் சுமாராக பந்து வீசிய இந்தியாவை சிறப்பாக எதிர்கொண்ட அந்த அணி 469 ரன்கள் குவித்த போதே பாதி வெற்றி உறுதியானது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 163 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் எடுக்க சுமாராக செயல்பட்ட இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்களை சாய்த்தார்.

அதை தொடர்ந்து பேட்டிங்கில் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா 15, கில் 13, விராட் கோலி 14, புஜாரா 14 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பெரிய சரிவை கொடுத்தனர். இருப்பினும் ரகானே 89, ஜடேஜா 48, தாக்கூர் 51 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முக்கிய ரன்களை எடுத்து ஃபாலோ ஆன் சந்திக்கும் அவமானத்திலிருந்து காப்பாற்றிய நிலையில் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக பட் கமின்ஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

பழிக்கு பழி:
அதை தொடர்ந்து 173 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 270/8 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 66* ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 3 விக்கெட்டுகள் எடுத்தார். இறுதியில் 444 என்ற வரலாற்றில் எட்டப்படாத இலக்கை துரத்திய இந்தியாவுக்கு மீண்டும் ரோகித் சர்மா 43, கில் 18, புஜாரா 27 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய நிலையில் போராடிய விராட் கோலி 49 ரன்களிலும் ரகானே 46 ரன்களில் அவுட்டாகி கைவிட்டனர்.

அதனால் இந்தியாவை 234 ரன்களுக்கு சுருட்டி உலக டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியனாக சாதனை படைத்த ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேதன் லயன் 4 விக்கெட்களை சாய்த்தார். பொதுவாக 5 உலக கோப்பைகளையும் டி20 உலகக் கோப்பையும் வென்று வரலாற்றின் வெற்றிகரமான அணியாக ஜொலிக்கும் ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கடந்த பல வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் இந்தியாவுக்கு எதிராக கடைசியாக 2014ஆம் ஆண்டு பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்ற அந்த அணி 2017ஆம் ஆண்டு இந்திய மண்ணில் நடைபெற்ற தொடரில் 2 – 1 (4) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

அதை விட 2019/20இல் வலுவான ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே 70 வருடங்களில் முதல் முறையாக தோற்கடித்த விராட் கோலி தலைமையிலான இந்தியா டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணியாக மாபெரும் சரித்திரம் படைத்தது. அதனால் அவமானத்தை சந்தித்த ஆஸ்திரேலியா 2020/21இல் முதல் போட்டியிலேயே 36க்கு ஆல் அவுட்டாக்கி இந்தியாவுக்கு மாஸ் பதிலடி கொடுத்தது.

ஆனாலும் ரகானே தலைமையில் கொதித்தெழுந்த இந்தியா இரும்பு அணியாக மாறி இளம் வீரர்களை வைத்து 30 வருடங்களுக்கு மேலாக தகர்க்கப்படாமல் இருந்த காபா கோட்டையை உடைத்து மூவர்ண கொடியை பறக்க விட்டு 2 – 1 (4) என்ற கணக்கில் மீண்டும் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் வைத்து வரலாறு படைத்தது. அந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற 2023 பார்டர் – கவாஸ்கர் கோப்பையிலும் 2 – 1 (4) என்ற கணக்கில் வென்ற இந்தியா அசுரனாக கருதப்படும் ஆஸ்திரேலியாவை கடந்த 2014க்குப்பின் தொடர்ந்து 9 வருடங்களாக வீழ்த்திய முதல் அணியாக சாதனை படைத்தது.

- Advertisement -

ஆனால் பொதுவாகவே கருணை காட்டாமல் அழுத்தமான போட்டிகளில் அசத்தும் திறமை கொண்டு ஆஸ்திரேலியா அவை அனைத்திற்கும் மொத்தமாக இந்த மாபெரும் ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்து பழிக்கு பழி தீர்த்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றுள்ளது அந்நாட்டு ரசிகர்களை மிகப்பெரிய மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க:WTC Final : இந்திய அணியை வீழ்த்தி நாங்கள் பெற்ற இந்த மகத்தான வெற்றிக்கு இதுவே காரணம் – பேட் கம்மின்ஸ் மகிழ்ச்சி

மறுபுறம் வழக்கம் போல சாதாரண இருதரப்பு தொடர்களிலும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையிலும் வென்ற இந்தியா முக்கியமான ஃபைனலில் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்காமல் மண்ணை கவ்வி இந்திய ரசிகர்களை தலைகுனிய வைத்துள்ளது. அதனால் டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருந்தும் என்ன பயன் என இந்தியாவை ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.

Advertisement