உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஜூன் 7-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது இன்று ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற ஐந்தாம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றின் இரண்டாவது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது. அதேவேளையில் இரண்டு முறையும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணி தோல்வியை சந்தித்து தங்களது சோகத்தை தொடர்கிறது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில் : இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸ்சின் போது துவக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை நாங்கள் இழந்தோம். ஆனாலும் டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் அமைத்த ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் எங்களுக்கு அந்த சறுக்கலான நிலையில் இருந்து நல்ல ஒரு சாதகமான நிலைக்கு கொண்டு சென்றது. அதிலும் குறிப்பாக டிராவிஸ் ஹெட் விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது.
இந்த தொடர் முழுவதுமே அவர் தனது அற்புதமான ஆட்டத்தை எங்களுக்காக வெளிப்படுத்தி வருகிறார். ஆஷஸ் தொடரில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிறப்பாக விளையாட துவங்கிய அவர் தற்போது வரை அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதோடு இந்த போட்டியிலும் கூட பந்துவீச்சாளர்கள் மீது அழுத்தத்தை சேர்த்து அவர் ரன்களை குவித்தார். ஒவ்வொரு நாளும் நாங்கள் போட்டியை மிகவும் ரசித்து புதிதான நாளாக நினைத்து விளையாடினோம்.

அந்த வகையில் ஐந்தாவது நாள் வரை போட்டியை நாங்கள் அழகாக கொண்டு சென்றதாக நினைக்கிறேன். பந்துவீச்சிலும் எங்கள் அணியின் வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். அதிலும் குறிப்பாக ஸ்காட் போலந்து என்னுடைய நம்பிக்கைக்குரிய வீரராக இருந்து வருகிறார். அதோடு அவர் என்னோடு எனக்கு பிடித்தமான வீரராகவும் தொடர்ந்து அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
எங்கள் அணியில் உள்ள அனைத்து வீரர்களுமே தங்களது ரோல் என்ன என்பதை உணர்ந்து முழு பங்களிப்பினை வழங்கியுள்ளனர். ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர் நாங்கள் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தாலும் அனைவரும் இந்த போட்டிக்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்துக் கொண்டனர். எந்தெந்த இடத்தில் சிறப்பாக செயல்பட வேண்டுமோ அந்த நேரத்தில் எல்லாம் அனைத்து வீரர்களும் அற்புதமான பங்களிப்பை வழங்கியதால் இந்த போட்டியில் வெற்றிபெற முடிந்தது.
இதையும் படிங்க : WTC Final : ரொம்ப நல்லாதான் நாங்க ஆடுனோம். ஆனால் நாங்கள் அடைந்த தோல்விக்கு இதுவே காரணம் – ரோஹித் வேதனை
டெஸ்ட் கிரிக்கெட் எப்பொழுதுமே எனக்கு பிடித்தமான ஒரு ஃபார்மேட். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டை பார்த்து தான் நாம் வளர்ந்திருக்கிறோம். எனவே இதுபோன்ற ஒரு டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றும் போது இதை விட வேறு மகிழ்ச்சி இல்லை. டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருவதாக பேட் கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.



