AUS vs WI : வெஸ்ட் இண்டீஸை ஊதி தள்ளிய ஆஸ்திரேலியா – 52 வருட சாதனையை உடைத்து ப்ரம்மாண்ட சாதனை வெற்றி

- Advertisement -

தங்களது நாட்டில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் ஏமாற்ற தோல்வியை சந்தித்து கோப்பையை தக்கவைக்க தவறிய ஆஸ்திரேலியா அடுத்ததாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கியது. அதே டி20 உலக கோப்பையில் முதல் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சி தோல்வியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெற்ற இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிப் பாதைக்கு திரும்பும் என அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் நவம்பர் 30ஆம் தேதியன்று பெர்த் நகரில் துவங்கிய முதல் போட்டியில் 164 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து ஆரம்பத்திலேயே தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்த வெஸ்ட் இண்டீஸ் டிசம்பர் 8ஆம் தேதியன்று துவங்கிய 2வது போட்டியில் அதைவிட மோசமாக செயல்பட்டது. புகழ் பெற்ற அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவாக இளஞ்சிவப்பு நிற பந்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 511/7 ரன்கள் குவித்து தங்களது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

- Advertisement -

அந்த அணிக்கு டேவிட் வார்னர் 21, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 8, கேமரூன் கிரீன் 9 என ஒரு சில வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் உஸ்மான் கவாஜா 62, உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் 163, டிராவிஸ் ஹெட் 175 என முக்கிய வீரர்கள் தேவையான அளவுக்கு பெரிய ரன்களை குவித்து ஆஸ்திரேலியாவை முன்னிலைப்படுத்தினர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக டேவோன் தாமஸ் மற்றும் அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். அதைத்தொடர்ந்து சிவப்பு நிற பந்திலேயே தடுமாறக்கூடிய வெஸ்ட் இண்டீஸ் இளஞ்சிவப்பு பந்தில் தரமாக பந்து வீசிய ஆஸ்திரேலியாவுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தங்களது முதல் இன்னிங்ஸில் 214 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

முரட்டு வெற்றி:
கேப்டன் ப்ரத்வெய்ட் 19, ப்ரூக்ஸ் 8, ப்ளாக்வுட் 3, டேவோன் தாமஸ் 13, ஜேசன் ஹோல்டர் 0 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக இளம் வீரர் டக்நரேன் சந்தர்பால் 47 ரன்கள் எடுத்தார். அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேதன் லயன் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 297 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிசங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா உஸ்மான் கவாஜா 45, மார்னஸ் லபுஸ்ஷேன் 31, ஸ்டீவ் ஸ்மித் 35, டிராவிஸ் ஹெட் 38* என முக்கிய வீரர்களின் ரன் குவிப்பால் 199/6 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் 3 விக்கெட்டுகள் எடுத்தார். இறுதியில் 497 என்ற இமாலய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவின் துல்லியமான பந்து வீச்சில் முதல் இன்னிங்ஸை விட படுமோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 77 ரன்களுக்கு பெட்டி பாம்பாக சுருண்டது. அதிகபட்சமாக மீண்டும் டக்நரேன் சந்தர்பால் 17 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிச்சல் ஸ்டார்க், மைக்கேல் நாசிர், ஸ்காட் போலண்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அதனால் 419 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற தன்னுடைய 52 வருட சாதனையை தகர்த்து புதிய வரலாற்றுச் சாதனை படைத்தது. இதற்கு முன் கடந்த 1969ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 389 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே முந்தைய சாதனையாகும். அதனால் 2 – 0 (2) என்ற என்ற கணக்கில் ஒய்ட் வாஷ் செய்து இத்தொடரின் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் தங்களை வலுவான அணி என்பதை மீண்டும் நிரூபித்தது.

இதையும் படிங்க: ஷிகர் தவானுக்கு ஆதரவும் வாய்ப்பும் கொடுக்க வேண்டிய நேரமிது – வாசிம் ஜாபர் கூறும் காரணம் என்ன

அதுபோக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை புள்ளி பட்டியலில் 108 புள்ளிகளை 75 சதவீதத்துடன் பெற்றுள்ள அந்த அணி முதலிடம் பிடித்துள்ளது. இதனால் வரும் பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் தொடரை வென்றால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறலாம் என்ற நல்ல நிலைமைக்கு ஆஸ்திரேலியா வந்துள்ளது.

Advertisement