9.4 ஓவரில் 156 ரன்ஸ்.. டிராவிஸ் ஹெட் மிரட்டல்.. ஸ்காட்லாந்தை புரட்டிய ஆஸ்திரேலியா.. உலக சாதனை வெற்றி

AUS vs SCO
- Advertisement -

ஸ்காட்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டி ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரில் செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்காட்லாந்து தடுமாற்றமாக விளையாடி 20 ஓவரில் 154-9 ரன்கள் குவித்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜார்ஜ் முன்சி 28, கேப்டன் பேரிங்டன் 23 மேத்தியூ க்ராஸ் 27 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக சீன் அபோட் 3, ஆடம் ஜாம்பா 2, சேவியர் பார்ட்லெட் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 155 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு அறிமுக வீரர் ஜேக் பிரேசர்-மெக்குர்க் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

டிராவிஸ் ஹெட் மிரட்டல்:

ஆனால் அவருக்கும் சேர்த்து எதிர்ப்புறம் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் சுமாராக பந்து வீசிய ஸ்காட்லாந்து பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டார். அதே வேகத்தில் பட்டையை கிளப்பிய டிராவிஸ் ஹெட் 17 பந்துகளில் 50 ரன்கள் தொட்டார். அடுத்ததாக வந்த கேப்டன் மிட்சேல் மார்ஷ் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி இரண்டாவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 39 (12) ரன்களில் அவுட்டானார்.

இருப்பினும் மறுபுறம் அரை சதம் கடந்த பின் பட்டாசாக விளையாடிய டிராவிஸ் ஹெட் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சதத்தைப் பற்றி கவலைப்படாமல் விளையாடிய அவர் 12 பவுண்டரி 5 சிக்சருடன் 80 (25) ரன்களை 320 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து நொறுக்கி ஆட்டமிழந்தார். இறுதியில் ஜோஸ் இங்லீஷ் 27* (13) மார்கஸ் ஸ்டோனிஸ் 8* ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

ஆஸ்திரேலியா உலக சாதனை:

அதனால் 9.4 ஓவரிலேயே 156-3 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அதன் காரணமாக 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் சுமாராக செயல்பட்ட ஸ்காட்லாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் வாட் 2 விக்கெட்டுகளை எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

இதையும் படிங்க: சச்சின் வாழ்நாள் சாதனையை ரூட் உடைப்பாரா? ஆடம் கில்கிறிஸ்ட், மைக்கேல் வாகன் கருத்து

முன்னதாக டிராவிஸ் ஹெட் சரவெடி பேட்டிங்கால் இப்போட்டியில் முதல் 6 ஓவர்களில் ஆஸ்திரேலியா 113-1 ரன்கள் குவித்தது. அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் பவர் பிளேவில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற உலக சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2023ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா 102-0 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.

Advertisement