- Advertisement -
உலக கிரிக்கெட்

87/4 டூ 215/4.. 37 பந்தில் 100.. வெ.இ அணியை சூறையாடிய டிம் டேவிட் சரவெடி சாதனை.. ஆஸி ஹாட்ரிக் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஆஸ்திரேலியா 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற நிலையில் 3வது போட்டி ஜூலை 26ஆம் தேதி நடைபெற்றது. பெஸட்ரே நகரில் இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங் செய்வதாக தீர்மானித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ்க்கு கேப்டன் சாய் ஹோப் – பிரண்டன் கிங் ஆகியோர் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடினார்கள். 12 ஓவர்கள் வரை அதிரடியாக விளையாடி 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அபார துவக்கத்தைக் கொடுத்தது. அதில் பிரண்டன் கிங் அரை சதத்தை அடித்து 62 (36) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

டேவிட் சரவெடி:

அடுத்து வந்த ஹெட்மயர் 9, ரூதர்போர்ட் 12, ரோவ்மன் போவெல் 9 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். ஆனால் மறுபுறம் பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ஹோப் சதத்தை அடித்து 8 பவுண்டரி 6 சிக்ஸருடன் 102* (57) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிசிங் கொடுத்தார். அதனால் 20 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 214/4 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலிய அணிக்கு நாதன் எலிஸ் 1, ஆடம் ஜாம்பா 1, மிட்சேல் ஓவன் 1 விக்கெட்டுகள் எடுத்தார்கள். அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு கேப்டன் மிட்சேல் மார்ஷ் 22 (19) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். மறுபுறம் அடித்து நொறுக்கிய மேக்ஸ்வெல் 20 (7) ரன்னில் ரன் அவுட்டானார். மிடில் ஆர்டரில் ஜோஸ் இங்லீஷ் 15, கேமரூன் க்ரீன் 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.

- Advertisement -

ஆஸ்திரேலியா வெற்றி:

அதனால் 87/4 என ஆஸ்திரேலியா தடுமாறிய போது டிம் டேவிட் மற்றும் மிட்சேல் ஓவன் அடித்து நொறுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதில் இருவருமே 200க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை வெளுத்து வாங்கினார்கள். குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை சூறையாடிய டேவிட் வெறும் 16 பந்தில் அரை சதத்தை விளாசி சிக்ஸர்களை மழையாக பொழிந்தார்.

தொடர்ந்து பட்டாசாக விளையாடிய அவர் 6 பவுண்டரி 11 சிக்சருடன் சதத்தை அடித்து 102* (37) ரன்கள் அடித்தார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வேகமான சதத்தை அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன் ஜோஸ் இங்லிஷ் 2024இல் ஸ்காட்லாந்துக்கு எதிராக 43 பந்துகளில் சதத்தை அடித்ததே முந்தைய சாதனை.

இதையும் படிங்க: அந்த சில்லித்தனத்தை செஞ்ச ரிஷப் பண்ட் தன்னையே காயமாக்கி.. இந்தியாவையும் முடிச்சுட்டாரு.. பாய்காட் சாடல்

அவருடன் ஓவன் 36* (16) ரன்கள் எடுத்ததால் 16.1 ஓவரிலேயே 215/4 ரன்களை எடுத்த ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் ஹாட்ரிக் வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியா 3 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே வென்றுள்ளது. மறுபுறம் ஹோப் சதத்தை அடித்தும் செஃபார்ட் 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெஸ்ட் இண்டீஸ் பரிதாபமாக தோற்றது.

- Advertisement -