155க்கு ஆல் அவுட்.. போராடிய ப்ரேவிஸ்.. தெ.ஆ அணியை சுருட்டி வீசிய ஆஸி.. சொந்த மண்ணில் மெகா சாதனை வெற்றி

AUS vs RSA 3
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியா தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அத்தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்ற தென்னாப்பிரிக்கா ஆரம்பத்திலேயே தொடரை வென்றது. அந்த நிலையில் சம்பிரதாய கடைசிப் போட்டி ஆகஸ்ட் 24ஆம் தேதி மெக்காய் நகரில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. குறிப்பாக கடந்தப் போட்டிகளில் தோல்வியை கொடுத்த தென்னாப்பிரிக்காவை இம்முறை அடித்து நொறுக்கிய அந்த அணி 50 ஓவரில் 431/2 ரன்கள் அடித்தது. அந்த அணிக்கு துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் 80 பந்துகளில் சதத்தை அடித்து 142 (103) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அமர்க்களம்:

அவருடன் சேர்ந்து நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்திய கேப்டன் மிட்சேல் மார்ஷ் தம்முடைய பங்கிற்கு சதத்தை அடித்து 100 (106) ரன்கள் குவித்தார். அவர்களைத் தொடர்ந்து பட்டாசாக பேட்டிங் செய்த கேமரூன் கிரீன் 47 பந்துகளில் சதத்தை அடித்து 118* (55) ரன்கள் விளாசினார். அவருடன் சேர்ந்து விளையாடிய அலெக்ஸ் கேரி 50* (37) ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்தார்.

தென்னாப்பிரிக்காவுக்கு கேசவ் மகாராஜ் மற்றும் சேனுரான் முத்துசாமி தலா ஒரு விக்கெட் எடுத்தனர். அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்கா ஆரம்பம் முதலே தடுமாற்றமாக பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு ஐடன் மார்க்ரம் 2, ரிக்கல்டன் 11, கேப்டன் பவுமா 19, ஸ்டப்ஸ் 1, வியான் முல்தர் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.

- Advertisement -

மெகா சாதனை வெற்றி:

மிடில் ஆடரில் மிரட்டலாக விளையாடிய தேவால்ட் ப்ரேவிஸ் 49 (28), டோனி டீ ஜோர்சி 33 (30) ரன்களில் அவுட்டானார். இறுதியில் கோர்பின் போஸ்க் 17 ரன்கள் எடுத்தும் 24.5 ஓவரில் தென்னாப்பிரிக்காவை 155 ரன்களுக்கு சுருட்டி வீசிய ஆஸ்திரேலியா 276 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா தங்களுடைய சொந்த மண்ணில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெறாதது ஏன்? – வெளியான தகவல்

இதற்கு முன் 2015 உலகக் கோப்பையில் பெர்த் மைதானத்தில் ஆப்கானிஸ்தானை 275 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததே ஆஸ்திரேலியாவின் முந்தைய பெரிய வெற்றியாகும். மேலும் ஒயிட்வாஷ் அவமானத் தோல்வியை தவிர்த்த ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கூப்பர் கோன்லி 5 விக்கெட்டுகள் எடுத்தார். மறுபுறம் தோல்வியை சந்தித்த தென்னாப்பிரிக்கா 2 – 1 (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்றது.

Advertisement