ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் செப்டம்பர் 28-ஆம் தேதி வரை 2025 ஆம் ஆண்டிற்கான 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு ஐக்கிய அமீரகம் பயணிக்க தயாராகி வருகின்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் ஹாங்காங் என எட்டு அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாட இருக்கின்றன.
இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெறாதது ஏன்? :
இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதே வேளையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியும் அண்மையில் பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் சூரியகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டு மொத்தம் 15 பேர் கொண்ட முழு பட்டியலும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழக சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் இடம்பெறாதது பலரது மத்தியிலும் பேசு பொருளாக மாறியுள்ளது. ஏனெனில் பவர்பிளே ஓவர்களில் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தும் அவர் பேட்டிங்கிலும் ஓரளவு கை கொடுப்பார் என்பதனால் அவர் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று சிலர் கூறி வருகின்றனர்.
ஆனால் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம் பெறாததற்கு சில முக்கிய காரணங்களும் இருப்பதாக அதுகுறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் டி20 போட்டிகளில் பவர்பிளே ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி ரன் குவிப்பை கட்டுப்படுத்தும் வீரர்களை காட்டிலும் பவர்பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தும் வீரர்களுக்கே இந்திய அணி முன்னுரிமை அளிப்பதாக தெரிகிறது.
அந்த வகையில் தான் இந்திய அணியில் அக்சர் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்களாக இடம்பெற்றுள்ளனர். வாஷிங்டன் சுந்தர் பவர்பிளே ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்தினாலும் அவரை தாண்டி விக்கெட் வீழ்த்தும் திறன் கொண்ட அக்சர் மற்றும் வருண் ஆகியோருக்கு இந்திய அணி முன்னுரிமை அளித்துள்ளது.
இதையும் படிங்க : கோலி மாதிரி பும்ராவும் நிறைய தியாகம் பண்ணியிருக்காரு.. அதனால் தான் அவர் இன்னைக்கு நம்பர் 1 – பரத் அருண் பேட்டி
அதேபோன்று டி20 போட்டிகளை பொறுத்தவரை அக்சர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி முதன்மை சூழற்பந்து வீச்சாளர்களாக பார்க்கப்படும் வேளையில் கூடுதலாக குல்தீப் யாதவும் அணியில் இருக்கிறார். எனவே இத்தனை வீரர்களை தாண்டி வாஷிங்டன் சுந்தருக்கு 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் கொடுப்பது சவாலான விடயமாக மாறியுள்ளது. அதனால் தான் வாஷிங்டன் சுந்தருக்கு இடம் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.



