
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி நவம்பர் நான்காம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு சாய்ம் ஆயுபை 1 ரன்களில் போல்டாக்கிய மிச்சேல் ஸ்டார்க் மறுபுறம் தடுமாறிய அப்துல்லா சபிக்கை 12 ரன்களில் காலி செய்தார்.
அதனால் 24-2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய பாகிஸ்தானுக்கு மிடில் ஆர்டரில் பாபர் அசாம் நிதானமாக விளையாட முயற்சித்து 37 ரன்களில் அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடிய புதிய கேப்டன் முகமது ரிஸ்வான் 44 ரன்களில் அவுட்டாகி சென்றார். ஆனால் அடுத்து வந்த கம்ரான் குலாம் 5, ஆகா சல்மான் 12, இர்ஃபான் கான் 22 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
இறுதியில் சாகின் அப்ரிடி அதிரடியாக 24 (19), நாசீம் ஷா 40 (39) ரன்கள் எடுத்தும் 46.4 ஓவரில் பாகிஸ்தானை 203 ரன்களுக்கு ஆஸ்திரேலியா சுருட்டியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 2, ஆடம் ஜாம்பா 2, மிட்சேல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். பின்னர் 204 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் மேத்தியூ ஷார்ட் 1, ஜேக் பிரேசர்-மெக்குர்க் 16 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
இருப்பினும் மூன்றாவது விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோஸ் இங்லிஷ் 49 (42) ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 44 (46) ரன்களும் எடுத்து சரிவை சரி செய்து அவுட்டானார்கள். ஆனால் அடுத்து வந்த மார்னஸ் லபுஸ்ஷேன் 16, ஆரோன் ஹார்டி 10, கிளன் மேக்ஸ்வெல் 0 ரன்களில் அவுட்டானார்கள். அதனால் 155-7 என சரிந்த ஆஸ்திரேலியா தோல்வியின் பிடியில் சிக்கியது.
இருப்பினும் அப்போது நங்கூரமாக விளையாடிய சீன் அபௌட் 13 ரன்களும் தில்லாக விளையாடிய கேப்டன் பட் கமின்ஸ் 32* (31) ரன்களும் ஸ்டார்க் 2* ரன்களும் எடுத்தனர். அதனால் 33.3 ஓவரில் 204-8 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா போராடி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அதன் காரணமாக 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இதையும்படிங்க: ஆஸ்திரேலியாவை வீழ்த்த இந்திய அணி குறுக்கு வழியை ஃபாலோ பண்ணாங்க.. இயன் ஹீலி விமர்சனம்
மறுபுறம் ஹரிஷ் ரவூப் 3, ஷாஹீன் அப்ரிடி 2 விக்கெட்டுகளை அதிகப்பட்சமாக எடுத்தும் பாகிஸ்தான் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. முன்னதாக இப்போட்டியில் 3 விக்கெட்டுகளையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவில் வேகமாக 100 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற பிரட் லீ’யின் சாதனையை உடைத்துள்ள மிட்சேல் ஸ்டார்க் புதிய சாதனை படைத்தார். இதற்கு முன் லீ 55 இன்னிங்சில் 100 விக்கெட்டுகள் எடுத்த நிலையில் ஸ்டார்க் 54 இன்னிங்சில் 100 விக்கெட்டுகளை கடந்துள்ளார்.