ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ கிரிக்கெட் அணி அதனுடைய சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா ஏ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் தமிழக வீரர் சாய் சுதர்சன் சதம் அடித்து வெற்றிக்கு போராடியும் இந்தியா ஏ அணி தோல்வியை சந்தித்தது.
முன்னதாக அந்தப் போட்டியில் கடைசி நாளில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு 86 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது அம்பயர்கள் இந்திய அணியினருக்கு வேறு பந்தை கொடுத்து பந்து வீசுமாறு சொன்னார்கள். அதற்கு ஏனென்று இந்திய அணியினர் கேட்ட போது பந்து சேதமடைந்திருப்பதால் மாற்றுவதாக நடுவர்கள் தெரிவித்தனர்.
பந்து சேதமா:
ஆனால் பந்தை சேதப்படுத்தாத போதும் நடுவர் அதை மாற்றியதால் அதிருப்தியடைந்த இந்திய வீரர் இஷான் கிசான் “இது முட்டாள் தனமான முடிவு” என்று சொன்னார். அதற்கு அம்பயர் ஷான் கிரைக் அவருக்கு எச்சரிக்கை கொடுத்தார். அந்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அப்போட்டியில் கடைசி நாளில் ஆஸ்திரேலியாவின் பக்கம் வெற்றி இருந்ததாக முன்னாள் வீரர் இயன் ஹீலி மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
அப்போது பந்தை சேதப்படுத்தி ஆஸ்திரேலிய அணியை இந்திய அணியினர் வீழ்த்த முயற்சித்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார். ஆனால் அதையும் தாண்டி ஆஸ்திரேலிய நேர்மையுடன் விளையாடி வென்றதாக தெரிவிக்கும் ஹீலி இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஒரு அணி பந்து மாற்றப்படுவதை பற்றி புகார் கூறுவதை நீங்கள் பார்க்கும் போது அவர்கள் ஏதோ ஒன்றில் ஈடுபட்டுள்ளனர் என்பது புரியும்”
ஹீலி விமர்சனம்:
“ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை அழுத்தத்திற்குள் போடுவதற்காக இந்தியா ஏ அணி பெரிய ரிவர்ஸ் ஸ்விங்கை ஏற்படுத்த முயற்சித்தார்கள். ஏனெனில் ஆஸ்திரேலியா சிறிய இலக்கை துரத்தியது. ஆனால் இந்தியா ஏ அணியினர் நினைத்தது நடக்கவில்லை. ஆஸ்திரேலியா ஏ அணியினர் தங்களுடைய தலையை கீழே விழாமல் சிறப்பாக விளையாடி வென்றனர்” என்று கூறினார்.
இதையும் படிங்க: முன்கூட்டியே ஆஸ்திரேலியா பயணிக்கும் கே.எல் ராகுல் மற்றும் துருவ் ஜுரேல் – என்ன நடந்தது?
இருப்பினும் பந்து சேதப்படுத்தப்படவில்லை என்று அப்போட்டியின் முடிவிலேயே ஆஸ்திரேலிய ஏ கேப்டன் மெக்ஸ்வீனி தெளிவாக கூறினார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையில் எதையும் என்னால் விளக்க முடியாது. நான் அந்த தருணத்தில் எதிர்ப்புறம் பேட்டிங் செய்து கொண்டிருந்தேன். நடுவர்கள் பந்தை மாற்றுவதாக சொன்னார்கள். ஏன் என்று எனக்கும் உறுதியாக தெரியவில்லை. ஏனெனில் பந்து சேதப்படுத்தப்பட்டிருந்ததாக எனக்கு தெரியவில்லை” என்று கூறினார்.



