28 வருடமாக தொடரும் சோகம்.. மிரட்டிய ஆஸி.. இந்தியாவின் மேஜிக்கை செய்ய முடியாமல் வீழ்ந்த பாகிஸ்தான்

AUS vs PAK 2nd Test
- Advertisement -

பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 360 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதனால் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள டிசம்பர் 26ஆம் தேதி நகரில் துவங்கிய 2வது போட்டியில் கண்டிப்பாக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 318 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்னஸ் லபுஸ்ஷேன் 63, உஸ்மான் கவாஜா 42, மிட்சேல் மார்ஷ் 41 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஆமீர் ஜமால் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் முடிந்தளவுக்கு போராடியும் முதல் இன்னிங்ஸில் 264 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

- Advertisement -

மீண்டும் தோல்வி:
அந்த அணிக்கு அதிகபட்சமாக அப்துல்லா ஷபிக் 62, கேப்டன் சான் மசூத் 54, முகமது ரிஸ்வான் 42 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 5, நேதன் லயன் 4 விக்கெட்களை எடுத்தார். அதைத்தொடர்ந்து 54 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 2வது இன்னிங்கில் மீண்டும் கடுமையாக போராடி 262 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. குறிப்பாக உஸ்மான் கவாஜா 0, டேவிட் வார்னர் 6, லபுஸ்ஷேன் 4, டிராவிஸ் ஹெட் 0 ரன்களில் அவுட்டானதால் 16/4 என ஆரம்பத்திலேயே திண்டாடிய ஆஸ்திரேலியா தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்போது 20 ரன்களில் கொடுத்த கேட்ச்சை பாகிஸ்தான் தவற விட்டதை பயன்படுத்திய மிட்சேல் மார்ஷ் 96 ரன்கள் விளாசி போட்டியில் திருப்புமுனையை உண்டாக்கினார். அவருடன் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 50 ரன்களும் அலெக்ஸ் கேரி 53 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சாகின் அப்ரிடி, மிர் ஹம்சா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

இறுதியில் 317 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு கேப்டன் சான் மசூத் சிறப்பாக விளையாடி 60 ரன்களும் பாபர் அசாம் முடிந்தளவுக்கு போராடி 41 ரன்களும் ஆகா சல்மான் 50 ரன்களும் எடுத்தனர். ஆனால் அவர்களை தவிர்த்து அப்துல்லா சபிக் 4, இமாம் 12, சௌத் ஷாகீல் 24, முகமது ரிஸ்வான் 35 என இதர பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் 237 ரன்களுக்கு பாகிஸ்தானை ஆல் அவுட் செய்த ஆஸ்திரேலியா 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இத்தொடரை கைப்பற்றி தங்களை சொந்த மண்ணில் கில்லி என்பதை காட்டியுள்ளது. அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 5, மிட்சேல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள்.

இதையும் படிங்க: காயத்தால் விலகிய பவுமாவால் தனது கடைசி போட்டியில் விளையாடும் டீன் எல்கருக்கு அடித்த அதிர்ஷ்டம் – விவரம் இதோ

இதனால் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை முதல் முறையாக வெல்ல வேண்டும் என்ற கனவை நிஜமாக்க தவறிய பாகிஸ்தான் 1995க்குப்பின் தொடர்ந்து 28வது வருடமாக 16வது போட்டியில் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற ஆசிய அணி என்ற இந்தியாவின் சரித்திரத்தை சமன் செய்யும் வாய்ப்பையும் பாகிஸ்தான் நழுவ விட்டது.

Advertisement