ஆஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 14ஆம் தேதி பெர்த் நகரில் துவங்கியது. 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து அபாரமாக விளையாடி 487 ரன்கள் குவித்தது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக தன்னுடைய கடைசி டெஸ்ட் தொடரில் விளையாடும் நட்சத்திர டேவிட் வார்னர் சதமடித்து 164, மிட்சேல் மார்ஷ் 90 ரன்கள் குவித்தனர். பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அறிமுக போட்டியில் சிறப்பாக விளையாடிய அமீர் ஜமால் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் எதிர்பார்க்கப்பட்டதை போலவே ஆஸ்திரேலியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்ஸில் 271 ரண்களுக்கு சுருண்டது.
தொடரும் பரிதாபம்:
குறிப்பாக பாபர் அசாம் 21, கேப்டன் ஷான் மசூட் 30 என முக்கிய வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக துவக்க வீரர் இமாம்-உல்-ஹக் 62 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேதன் லயன் 3 விக்கெட்களை வீழ்த்தினார். அதன் பின் 261 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸில் 235/5 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக துவக்க வீரர் உஸ்மான் கவாஜா 90, ஸ்டீவ் ஸ்மித் 45, மிட்சேல் மார்ஷ் 63* ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக மற்றொரு அறிமுக வீரர் குர்ரம் சேஷாத் 3 விக்கெட்டுகள் எடுத்தார். இறுதியில் 450 என்ற மெகா இலக்கை துரத்திய பாகிஸ்தான் கொஞ்சம் கூட போராடாமல் முன்பை விட மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 89 ரன்களுக்கு சுருண்டது.
அப்துல்லா ஷபிக் 2, இமாம் 10, கேப்டன் சான் மசூத் 2, பாபர் அசாம் 14 என முக்கிய வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி தோல்விக்கு காரணமாக அமைந்த நிலையில் அதிகபட்சமாக சவுத் சாக்கில் 24 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசல்வுட் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதனால் 360 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற ஆஸ்த்ரேலியா 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை காண்பித்துள்ளது.
இதையும் படிங்க: மும்பை இந்தியன்ஸ்ஸின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட பாண்டியாவிற்கு வாழ்த்து தெரிவித்து – அவரது மனைவி வெளியிட்ட பதிவு
மறுபுறம் 1995இல் கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வென்றது. ஆனால் அதன் பின் கடந்த 28 வருடங்களாக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெல்ல முடியாத பாகிஸ்தான் தொடர்ந்து 15 போட்டிகளில் தோல்வியை சந்தித்து திண்டாடி வருகிறது. அந்த வகையில் கடந்த 28 வருடங்களாக சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக தோற்காமல் இருந்து வரும் சாதனையை ஆஸ்திரேலியா இந்த போட்டியிலும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.



