107க்கு ஆல் அவுட்.. வல்லவனுக்கு வல்லவனாக.. வலுவான நியூஸிலாந்து மண்ணில் ஆஸ்திரேலியா செய்த சம்பவம்

NZ vs AUS 2
- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதனால் இத்தொடரை வெல்ல பிப்ரவரி 23ஆம் தேதி ஆக்லாந்து நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்து களமிறங்கியது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு ஸ்டீவ் ஸ்மித் 5 ரன்களில் அவுட்டாக மற்றொரு துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 2 பவுண்டரி 5 சிக்சருடன் அதிரடியாக 45 (22) ரன்கள் எடுத்தார். அதைத் தொடர்ந்து வந்த கிளன் மேக்ஸ்வெல் 6, ஜோஸ் இங்லீஷ் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.

- Advertisement -

ஆஸ்திரேலியா வெற்றி:
அதே போல மறுபுறம் அதிரடி காட்ட முயற்சித்த கேப்டன் மிட்சேல் மார்ஷ் 26 (21) ரன்களில் அவுட்டாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிம் டேவிட் 17 (19), மேத்தியூ வேட் 1 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இறுதியில் பட் கமின்ஸ் 28 (22), நாதன் எலிஸ் 11 (15) ரன்கள் எடுத்தும் 19.5 ஓவரில் ஆஸ்திரேலியாவை 174 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய நியூசிலாந்து சார்பில் லாக்கி பெர்குசன் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

அதை தொடர்ந்து 175 ரன்கள் இலக்கை துரத்திய நியூசிலாந்துக்கு ஃபின் ஆலன் 6, வில் எங் 5, கேப்டன் மிட்சேல் சான்ட்னர் 7 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அந்த நிலையில் கிளன் பிலிப்ஸ் நிதானமாக விளையாடி வெற்றிக்கு போராடிய போதிலும் எதிர்புறம் வந்த மார்க் சேப்மேன் 2, ஜோஷ் கிளார்க்சன் 10 ரன்களில் அவுட்டாகி அழுத்தத்தை உண்டாக்கினர்.

- Advertisement -

அதனால் ஒரு கட்டத்தில் கிளன் பிலிப்ஸை 42 (35) ரன்களில் அவுட்டாக்கிய ஆஸ்திரேலியா அடுத்து வந்த வீரர்களையும் சொற்ப ரன்களில் காலி செய்து 17 ஓவர்களில் நியூசிலாந்தை வெறும் 102 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே வென்றுள்ளது.

இதையும் படிங்க: 221 பந்துகள்.. க்ளாஸ் காட்டும் ரூட்.. திருப்பி அடிக்கும் இங்கிலாந்து.. முதல் முறையாக தடுமாறும் இந்தியா

குறிப்பாக சமீபத்திய டி20 தொடரில் பாகிஸ்தானை 4 – 1 (5) என்ற கணக்கில் வீழ்த்தியது உட்பட நியூசிலாந்து எப்போதுமே தங்களுடைய சொந்த மண்ணில் வலுவான அணியாக செயல்பட்டு வருகிறது. ஆனால் வல்லவனுக்கு வல்லவன் இருப்பான் என்பது போல இத்தொடரில் வலுவான நியூஸிலாந்தை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்துள்ள ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையை வென்றுள்ளது.

Advertisement