வெறும் 3 விக்கெட்ஸ்.. 31 வருடமாக நேர்ந்த சோகம்.. நியூஸிலாந்தின் வெற்றியை பறித்த ஆஸி.. 5 – 0 என வெற்றி

- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதனால் மார்ச் 7ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச் நகரில் துவங்கிய 2வது போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்து களமிறங்கியது. இருப்பினும் அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து சுமாராக செயல்பட்டு 162 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக டாம் லாதம் 38 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா அதிகபட்சமாக ஜோஷ் ஹேசல்வுட் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா தங்களுடைய முதல் இன்னிங்ஸில் முடிந்தளவுக்கு போராடி 256 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்னஸ் லபுஸ்ஷேன் 90 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மாட் ஹென்றி 7 விக்கெட்டுகள் சாய்த்தார்.

- Advertisement -

மிரட்டும் ஆஸ்திரேலியா:
அதைத்தொடர்ந்து 94 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய நியூஸிலாந்து மிகவும் போராட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 372 ரன்கள் குவித்து கம்பேக் கொடுத்தது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்தரா 82, டாம் லாதம் 73, டார்ல் மிட்சேல் 51 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 4, நேதன் லயன் 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இறுதியில் 279 ரன்கள் துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு ஸ்டீவ் ஸ்மித் 9, உஸ்மான் கவாஜா 11, மார்னஸ் லபுஸ்ஷேன் 6, கேமரூன் கிரீன் 5 என டாப் 4 பேட்ஸ்மேன்கள் நியூசிலாந்தின் தரமான வேகப்பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். அப்போது நிதானமாக விளையாட முயற்சித்த டிராவிஸ் ஹெட் 18 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் ஆஸ்திரேலியாவை 80/5 என கட்டுப்படுத்திய நியூசிலாந்து கண்டிப்பாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் அப்போது மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்த அலெக்ஸ் கேரி மற்றும் மிட்சேல் மார்ஷ் ஆகியோர் நங்கூரமாக நின்று நியூசிலாந்துக்கு சவாலை கொடுத்தனர். குறிப்பாக தேவையான நேரத்தில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி சுமாரான பந்துகளை பவுண்டரிகளாக பறக்க விட்டு ரன் குவிப்பில் ஈடுபட்டது. நேரம் செல்ல செல்ல 6வது விக்கெட்டுக்கு 140 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அரை சதமடித்து நியூசிலாந்தை கடுப்பேற்றிய இந்த ஜோடியில் மிட்சேல் மார்ஷ் 80 ரன்கள் குவித்து அவுட்டானார்.

அடுத்ததாக வந்த கேப்டன் பட் கமின்ஸ் மீண்டும் விக்கெட்டை விடாமல் 32* ரன்கள் அடித்து நியூசிலாந்தின் வெற்றியை பறித்தார். ஏனெனில் எதிர்ப்புறம் அலெக்ஸ் கேரி சதத்தை நழுவ விட்டாலும் 98* ரன்கள் குவித்து ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 281/7 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா வெறும் 3 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்றது. அதன் காரணமாக நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக பென் சியர்ஸ் 4, மாட் ஹென்றி 2 விக்கெட்டுகளை எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

இதையும் படிங்க: பயிற்சியின் இடையே சி.எஸ்.கே அணி வீரர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய தோனி – எதற்கு தெரியுமா?

குறிப்பாக கடைசியாக 1993ஆம் ஆண்டு தங்களுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வென்றிருந்த நியூசிலாந்து அதன் பின் கடந்த 31 வருடங்களாக ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாமல் மண்ணை கவ்வி வருகிறது. மறுபுறம் இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடந்த டி20 தொடரை 3 – 0 என்ற கணக்கில் வென்ற ஆஸ்திரேலியா தற்போது டெஸ்ட் தொடரிலும் நியூசிலாந்தை தோற்கடித்து 2 – 0 என்ற கணக்கில் கோப்பையை வென்று தோல்வியே சந்திக்காமல் 5 வெற்றிகளை பெற்றது.

Advertisement