179 ரன்ஸ்.. ஆஸின்னா யார் தெரியுமா? தொடர்ந்து 31வது வருடமாக நியூஸிலாந்து மண்ணில் செய்த அமர்க்களம்

- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அங்கு முதலாவதாக நடந்த டி20 கிரிக்கெட் தொடரை என்ற கணக்கில் 3 – 0 (3) ஒயிட் வாஷ் செய்து வென்றது. அதைத் தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 28ஆம் தேதி வெலிங்டன் நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் போராடி 383 ரன்கள் சேர்த்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக கேமரூன் கிரீன் சதமடித்து 174* ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதன் பின் களமிறங்கிய நியூசிலாந்து சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 179 ரன்களுக்கு சுருண்டு ஃபாலோ ஆன் பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ் 71 (70), மாட் ஹென்றி 42 (34) ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேத்தன் லயன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

- Advertisement -

31 வருடங்களாக:
அதைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு ஃபாலோ ஆன் கொடுக்காத ஆஸ்திரேலியா 204 ரன்கள் முன்னிலையுடன் மீண்டும் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அப்போது சிறப்பாக பந்து வீசிய நியூசிலாந்து 164 ரன்களுக்கு ஆஸ்திரேலியாவை சுருட்டி போட்டியில் திருப்பு முனையை உண்டாக்கியது. ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக நேத்தன் லயன் 41, கேமரூன் க்ரீன் 34 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ் 5, மாட் ஹென்றி 2 விக்கெட்களை சாய்த்தார்.

இறுதியில் 359 என்ற கடினமான இலக்கை துரத்திய நியூசிலாந்துக்கு டாம் லாதம் 8, வில் எங் 15, கேன் வில்லியம்சன் 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் 59/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய நியூசிலாந்தின் வெற்றி கேள்விக்குறியானது. இருப்பினும் அப்போது நங்கூரமாக விளையாடிய இளம் வீரர் ரச்சின் ரவீந்திர அரை சதமடித்து வெற்றிக்கு போராடியதால் நியூசிலாந்து வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

- Advertisement -

ஆனால் அவரை 59 ரன்களில் அவுட்டாக்கிய ஆஸ்திரேலிய பவுலர்கள் அடுத்து வந்த வீரர்களையும் சொற்ப ரன்களில் காலி செய்து நியூசிலாந்தை 196 ரன்களுக்கு சுருட்டி வீசினர். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேதன் லயன் 6, ஜோஸ் ஜெசல்வுட் 2 விக்கெட்களை எடுத்தார். அதனால் 172 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 1 – 0* (2) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: இன்னும் 8 விக்கெட் தான் தேவை.. உலகிலேயே 3 ஆவது வீரராக ரவீந்திர ஜடேஜா – நிகழ்த்தவிருக்கும் சாதனை

கடைசியாக 1993ஆம் ஆண்டு ஆக்லாந்து நகரில் நியூஸிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வியை சந்தித்திருந்தது. ஆனால் அதன் பின் கடந்த 31 வருடங்களாக நியூஸிலாந்தை அதன் சொந்த மண்ணில் சந்தித்த 12 போட்டிகளில் 11 வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியா 1 ட்ராவை பதிவு செய்து தோல்வியை சந்திக்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது. அந்த வகையில் வலுவான நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 21ஆம் நூற்றாண்டில் ஒரு தோல்வியை கூட சந்திக்காத ஆஸ்திரேலியா தங்களை உலகின் மகத்தான அணி என்பதை காண்பித்து வருகிறது.

Advertisement