ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் ஜூன் 12ஆம் தேதி ஆண்ட்டிகுவா நகரில் 24வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலியா மற்றும் நமீபியா அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய நமீபியா எதிர்பார்த்தது போலவே ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சில் திணறலாக பேட்டிங் செய்தது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் கெர்ஹார்ட் எராஸ்மஸ் 36 (43) ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 4, ஜோஸ் ஹேசல்வுட் 2, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத் தொடர்ந்து 73 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் அதிரடியாக 20 (8) ரன்கள் குவித்து டேவிட் வீஸ் வேகத்தில் அவுட்டானார்.
மோசமான உலக சாதனை:
இருப்பினும் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் அதிரடி காட்டிய டிராவிஸ் ஹெட் 34* (17) ரன்களும் கேப்டன் மிட்சேல் மார்ஷ் 18* (9) ரன்களும் எடுத்தனர். அதனால் 5.4 ஓவரிலேயே 74/1 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. அதனால் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் 3 வெற்றிகள் பெற்ற ஆஸ்திரேலியா சூப்பர் 8 சுற்று தகுதி பெற்றது.
மேலும் 5.4 ஓவரிலேயே வென்ற ஆஸ்திரேலியா டி20 உலகக் கோப்பையில் அதிக பந்துகளை மீதும் வைத்து 2வது மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த அணியாக சாதனை படைத்தது. 2014 டி20 உலகக் கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிராக 90 பந்துகள் மீதும் வைத்த வென்ற இலங்கை அப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. அத்துடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா டி20 கிரிக்கெட்டில் விக்கெட்டுகள் அடிப்படையில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய நமீபியா படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக அந்த அணிக்கு டாப் 3 பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாதால் 4வது இடத்தில் களமிறங்கிய கேப்டன் கேர்ஹார்ட் எராஸ்மாஸ் நங்கூரமாக விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் அதற்காக ரொம்பவே தடுமாற்றமாக பேட்டிங் செய்த அவர் முதல் 16 பந்துகளில் 1 ரன் கூட எடுக்கவில்லை.
இதையும் படிங்க: 18 வருட டி20 உலகக் கோப்பை வரலாற்றின் தடவலான இன்னிங்ஸ் ஆடிய ரிஸ்வான்.. மோசமான உலக சாதனை
அந்த வகையில் திண்டாட்டமாக பேட்டிங் செய்த அவர் ஒரு வழியாக 17வது பந்தில் தன்னுடைய முதல் ரன்னை எடுத்தார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் ரன்னை எடுப்பதற்கு அதிக பந்துகளை எடுத்துக் கொண்ட வீரர் என்ற மோசமான உலக சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன் 2007ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக அமீரக வீரர் தன்மய் மிஸ்ரா 16 பந்துகளில் முதல் ரன் எடுத்ததே முந்தைய சாதனையாகும். அந்த வகையில் இந்திய ஜாம்பவான் ராகுல் டிராவிட்டுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அவர் இப்போட்டியில் பரிதாப சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.



