148 ரன்ஸ்.. 1 அடிக்கு 2 பதிலடி கொடுத்த ஆஸி.. சொந்த ஊரில் இந்திய மகளிரணி பரிதாப சாதனை

IND vs AUS Womens
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி அங்கு 1 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட அடுத்தடுத்த தொடர்களில் விளையாடியது. அதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வரலாற்றிலேயே முதல் முறையாக ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இந்திய மகளிரணி புதிய சரித்திரம் படைத்து வெற்றி கண்டது ரசிகர்களிடம் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரில் அதற்கு பதிலடியாக இந்திய மகளிரணியை சொல்லி அடித்த ஆஸ்திரேலியா 3 – 0 (3) என்ற கணக்கில் ஒய்ட்வாஷ் செய்து கோப்பையை வென்றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று பதிலடி கொடுத்து அசத்தியது.

- Advertisement -

ஆஸியின் பதிலடி:
இருப்பினும் 2வது போட்டியில் மீண்டும் வென்ற ஆஸ்திரேலியா பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்தது. அதனால் இத்தொடரின் வெற்றிகளரை தீர்மானிக்கும் 3வது போட்டி ஜனவரி 9ஆம் தேதி இரவு நவி மும்பையில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 20 ஓவர்களில் கடுமையாக போராடி 147/6 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணிக்கு சபாலி வர்மா 26, மந்தனா 29, ஜெமிமா ரோட்ரிக்கர்ஸ் 2, கேப்டன் ஹெர்மன்ப்ரீத் கௌர் 3, தீப்தி ஷர்மா 14 என முக்கிய வீராங்கனைகள் அனைவரும் பெரிய ரன்கள் எடுக்க தவறிய நிலையில் அதிகபட்சமாக ரிச்சா கோஸ் 34 (28) ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக அனபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வாரஹம் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

அதைத்தொடர்ந்து 148 என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு கேப்டன் அலிசா ஹீலி ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடி 55 (38) ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் கடைசி வரை அவுட்டாகாமல் தம்முடைய பங்கிற்கு நிதானத்தை காட்டிய பெத் மூனி 52* (45) ரன்கள் எடுத்தார். இறுதியில் எலிஸ் பெரி டக் அவுட்டானாலும் தஹிளா மெக்ராத் 20, போபே லிட்ச்பீல்ட் 17* ரன்கள் எடுத்ததால் 18.4 ஓவர்லையே 149/3 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியின் விக்கெட் கீப்பர் யார்? சஞ்சு சாம்சனா? ஜிதேஷ் சர்மாவா?

அதனால் 2 – 1 (3) என்ற கணக்கில் இத்தொடரின் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா தங்களை நடப்புச் சாம்பியன் என்பதை நிரூபித்தது. குறிப்பாக இந்த சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் போட்டியில் தோற்கடித்து கொடுத்த 1 அடிக்கு ஒருநாள், டி20 தொடரில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா 2 பதிலடி கொடுத்தது. மறுபுறம் அதிகபட்சமாக பூஜா வஸ்திரகர் 2 விக்கெட்டுகள் எடுத்தும் பேட்டிங்கில் சொதப்பியதால் இந்தியா சொந்த மண்ணில் தலை குனியும் தோல்வியை சந்தித்தது. மேலும் வரலாற்றிலேயே முதல் முறையாக 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இந்திய மகளிரணி ஒரு டி20 தொடரில் தோல்வியை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

Advertisement