- Advertisement -
உலக கிரிக்கெட்

154 ரன்ஸ்.. லபுஸ்ஷேன் தனித்துவ உலக சாதனை.. இங்கிலாந்தை வெளுத்த ஹெட் மாபெரும் சாதனை.. ஆஸி வெற்றி

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. அதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடர் மழையால் 1 – 1* என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அதைத்தொடர்ந்து அவ்விரு அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெற்றது.

ட்ரெண்ட் பிரிட்ஜ் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அதிரடியாக விளையாட முயற்சித்து 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 315 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு துவக்க வீரர் பென் டக்கெட் 11 பவுண்டரியுடன் அதிகபட்சமாக 95 (91) ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

டிராவிஸ் ஹெட் ஸ்பெஷல்:

அவருடன் வில் ஜேக்ஸ் 62 (56), கேப்டன் ஹரி ப்ரூக் 39 (31), பேத்தல் 35 (34) ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 2, ஆடம் ஜாம்பா, மார்னஸ் லபுஸ்ஷேன் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 316 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் தம்முடைய ஸ்டைலில் அதிரடியாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் கேப்டன் மிட்சேல் மார்ஷ் 10, ஸ்டீவ் ஸ்மித் 32, கேமரூன் கிரீன் 32 ரன்களில் அவுட்டாகி சென்றனர்.

இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய டிராவிஸ் ஹெட் சதமடித்தார். அவருடன் மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்த மார்னஸ் லபுஸ்ஷேன் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடிய அரை சதமடித்தார். நேரம் செல்ல செல்ல 2023 உலகக்கோப்பை ஃபைனல் போல அட்டகாசமாக விளையாடிய அந்த ஜோடி 148 பார்ட்னர்ஷிப் அமைத்து 44 ஓவரிலேயே ஆஸ்திரேலியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தது.

- Advertisement -

தனித்துவமான உலக சாதனை:

அதில் டிராவிஸ் ஹெட் 20 பவுண்டரி 5 சிக்ஸருடன் 154* (129) ரன்களும் லபுஸ்ஷேன் 77* (61) ரன்களும் குவித்து ஃபினிஷிங் செய்தனர். இப்போட்டியின் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த ஆஸ்திரேலிய வீரர் என்ற மாபெரும் சாதனையை டிராவிஸ் ஹெட் (154*) படைத்தார். இதற்கு முன் கடந்த 2013ஆம் ஆண்டு சௌதம்டன் நகரில் ஷேன் வாட்சன் 143 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: துலீப் கோப்பை 2024: 306 ரன்ஸ்.. கேரியரை முடித்துக்கொள்ளும் ஸ்ரேயாஸ் ஐயர்? சஞ்சு சாம்சன் அதிரடி கம்பேக்

அதை விட இப்போட்டியில் 3 விக்கெட்டுகள் எடுத்த லபுஸ்ஷேன் 77* ரன்கள் மட்டுமின்றி ஃபீல்டிங்கில் 4 கேட்சுகளையும் பிடித்தார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் 50க்கும் மேற்பட்ட ரன்கள் 3 விக்கெட்டுகள் 4 கேட்ச்கள் பிடித்த முதல் வீரராக லபுஸ்ஷேன் தனித்துவமான உலக சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றியால் 1 – 0* ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -