இந்தியாவில் துலீப் கோப்பை 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் கடந்த செப்டம்பர் 5 முதல் நடைபெற்று வருகிறது. அதில் முதல் 2 ரவுண்டுகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா டி ஏற்கனவே கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. அத்துடன் கடந்த ரஞ்சிக்கோப்பையில் விளையாடாததால் இந்திய அணியின் சம்பள ஒப்பந்தத்திலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக நீக்கப்பட்டார்.
அதன் பின் ஐபிஎல் 2024 கோப்பையை கொல்கத்தா கேப்டனாக வென்றதால் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவரை மீண்டும் இந்திய ஒருநாள் அணிக்குள் கொண்டு வந்தார். இருப்பினும் டெஸ்ட் அணியில் கம்பேக் கொடுக்க துலீப் கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாட வேண்டிய நிலையில் களமிறங்கினார். ஆனால் அந்த வாய்ப்பில் முதல் ரவுண்டில் அரை சதமடித்த அவர் 2வது ரவுண்டில் டக் அவுட்டானார்.
முடியும் கேரியர்:
குறிப்பாக கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு களமிறங்கி அவர் டக் அவுட்டானது கிண்டல்களை ஏற்படுத்தியது. அந்த சூழ்நிலையில் செப்டம்பர் 19ஆம் தேதி அனந்தபூரில் 3வது ரவுண்டு போட்டிகள் துவங்கின. அதில் 5வது போட்டியில் இந்தியா பி மற்றும் டி அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா டி அணிக்கு 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த தேவ்தூத் படிக்கல் 50 ரன்களும் கேஎஸ் பரத் 52 ரன்களும் குவித்து அவுட்டானார்கள். அதன் பின் வந்த நிஷாந்த் சிந்துவை 19 ரன்களில் அவுட்டாக்கிய ராகுல் சஹர் அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை டக் அவுட்டாக்கினார்.
சஞ்சு சாம்சன் அதிரடி:
இருப்பினும் அடுத்து வந்த சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினார். அவருடன் எதிர்புறம் சேர்ந்து விளையாடிய ரிக்கி புய் அரை சதமடித்து 56 ரன்களில் அவுட்டானார். இறுதியில் நிறைவுக்கு வந்த முதல் நாள் முடிவில் 306-5 ரன்கள் குவித்துள்ள இந்தியா டி வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது. அந்த அணிக்கு களத்தில் சரன்ஸ் ஜெய்ன்ஸ் 26 ரன்களுடன் உள்ளார். அதே போல சஞ்சு சாம்சன் 10 பவுண்டரி 3 சிக்சருடன் 89* (83) ரன்கள் குவித்து அதிரடியான கம்பேக் கொடுத்து வருகிறார்.
இதையும் படிங்க: இதனால தான் ரோஹித், விராட் அவுட்டானாங்க.. அவர பாத்து பயப்படல.. கத்துக்கிட்டு வலுவாகிறேன்.. ஜெய்ஸ்வால் பேட்டி
ஆனால் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் டக் அவுட்டானார். ஏற்கனவே இந்திய அணியில் சர்பராஸ் கான், ஜூரேல் ஆகியோர் வங்கதேச தொடரில் தேர்வாகி பெஞ்சில் அமர்ந்துள்ளனர். அந்த சூழ்நிலையில் துலீப் கோப்பையில் அடுத்தடுத்து டக் அவுட்டாகியுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய டெஸ்ட் அணியில் தன்னுடைய கேரியரை முடித்துக் கொள்ளும் அளவுக்கு சொதப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.



