வங்கதேசத்துக்கு எதிராக சென்னையில் இந்திய கிரிக்கெட் அணி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்தியா முதல் நாள் முடிவில் 339-6 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே கேப்டன் ரோஹித் சர்மா 6, விராட் கோலி 6, சுப்மன் கில் 0 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.
அதனால் 34-3 என தடுமாறிய இந்திய அணி காப்பாற்ற முயற்சித்த ஜெய்ஸ்வால் 56, ரிஷப் பண்ட் 39, ராகுல் 16 ரன்களில் போராடி அவுட்டானார்கள். அதன் காரணமாக 144-6 என மீண்டும் தடுமாறிய இந்திய அணிக்கு அஸ்வின் அபாரமாக பேட்டிங் செய்து சொந்த ஊரில் சதமடித்து 102* ரன்கள் குவித்துள்ளார். அவருடன் சேர்ந்து விளையாடும் ஜடேஜா 86* ரன்கள் குவித்து இந்தியாவை சரிவிலிருந்து காப்பாற்றினார்.
ஹசனுக்கு பயப்படல:
மறுபுறம் ரோஹித், விராட் கோலி உள்ளிட்ட தரமான பேட்ஸ்மேன்களை தெறிக்க விட்ட வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மஹ்முத் 4* விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்நிலையில் ஹசன் மஹ்முத் இந்திய பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தவில்லை என்று ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் போட்டி துவங்கிய முதல் மணி நேரத்தில் மேகமூட்டத்துடன் கூடிய சூழ்நிலை நிலவியதாக ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
அதனாலேயே விராட், ரோஹித் ஆகியோர் தடுமாற்றமாக விளையாடி அவுட்டானதாக தெரிவிக்கும் ஜெய்ஸ்வால் இது போன்ற சவால்களே தம்மை வலுவாக்குவதாக கூறியுள்ளார். இது பற்றி முதல் நாள் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆரம்பத்தில் வானிலை பார்த்தால் அது கொஞ்சம் மேகமூட்டமாக இருந்தது உங்களுக்குத் தெரியும். அந்த நேரத்தில் பிட்ச் எதிரணிக்கு உதவி செய்தது. அந்த நேரங்களை நாங்கள் பாதுகாப்பாக விளையாடி தாண்டுவதற்கு முயற்சித்தோம்”
வலுவாகும் ஜெய்ஸ்வால்:
“ஹசன் கண்டிப்பாக நன்றாக பந்து வீசினார். அதே சமயம் அவர் வீசிய சில சுமாரான பந்துகளை நாங்கள் ரன்கள் குவித்தோம். எங்கள் கால்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி பேசினோம். சுமாரான பந்துகள் இருந்தால் அதில் ரன்கள் குவிக்க முயற்சித்தோம். முடிந்தளவு பார்ட்னர்ஷிப் அமைக்க முயற்சித்தோம்”
இதையும் படிங்க: 195 ரன்ஸ்.. இந்திரன் சந்திரனாக இந்தியாவை காப்பாற்றிய அஸ்வின் – ஜடேஜா.. புதிய உலக சாதனையுடன் 2 அபார சாதனைகள்
“இது போன்ற சூழ்நிலைகளில் சென்று விளையாடுவது சிறப்பாக இருந்தது. இது போன்ற சூழ்நிலைகள் தான் சவாலான காலநிலைகளில் எப்படி என்னுடைய ஆட்டத்தை விளையாட வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்து என்னை வலுவாக்குகிறது. ஆரம்பத்தில் பந்து வேகமாக கொஞ்சம் நகர்ந்தது. அதனால் கொஞ்சம் நாங்கள் நேரம் எடுத்து விளையாடினோம். ஆனால் கடைசி செசனில் வேகமாக ரன்கள் குவித்த நாங்கள் தற்போது நல்ல நிலையில் இருக்கிறோம்” என்று கூறினார்.



