இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்தியா முதல் நாள் முடிவில் 339-6 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா 6, விராட் கோலி 6, சுப்மன் கில் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
அதனால் 34-3 என தடுமாறிய இந்திய அணிக்கு கை கொடுக்க முயற்சித்த ஜெய்ஸ்வால் 56, ரிஷப் பண்ட் 39, கேஎல் ராகுல் 16 ரன்களில் போராடி அவுட்டானார்கள். அதன் காரணமாக 144-6 என மீண்டும் இந்திய அணி தடுமாறிய போது ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அதில் தம்முடைய சொந்த ஊரில் கொஞ்சம் அதிரடியாக விளையாடிய அஸ்வின் சதமடித்து 102* ரன்கள் குவித்துள்ளார்.
உலக சாதனை ஜோடி:
அவருடன் சேர்ந்து விளையாடிய ரவீந்திர ஜடேஜா தம்முடைய பங்கிற்கு 86* ரன்கள் குவித்து களத்தில் உள்ளார். அந்த வகையில் இப்போட்டியில் 7வது விக்கெட்டுக்கு 195* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அஸ்வின் மற்றும் ஜடேஜா இந்தியாவை காப்பாற்றினார்கள். அத்துடன் இதன் வாயிலாக ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 7வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற உலக சாதனையை அஸ்வின் மற்றும் ஜடேஜா படைத்துள்ளார்கள்.
இதற்கு முன் கடந்த 2009ஆம் ஆண்டு ஹமில்டன் நகரில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் 60-6 என நியூசிலாந்து தடுமாறிய போது டேனியல் வெட்டோரி மற்றும் ஜெஸி ரைடர் ஆகியோர் 7வது விக்கெட்டுக்கு 186 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததே முந்தைய உலக சாதனையாகும். இது போக வங்கதேசத்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் 7 அல்லது அதற்கு கீழான விக்கெட்டுக்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடியாகவும் அஸ்வின் ஜடேஜா சாதனை படைத்துள்ளனர்.
இந்திரன் – சந்திரன்:
இதற்கு முன் கடந்த 2004ஆம் ஆண்டு டாக்காவில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 10வது விக்கெட்டுக்கு ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் – ஜாகிர் கான் ஆகியோர் 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததே முந்தைய சாதனையாகும். மேலும் சொந்த மண்ணில் 7 அல்லது அதற்குக் கீழான விக்கெட்டுக்கு 500க்கும் மேற்பட்ட பார்ட்னர்ஷிப் ரன்கள் குவித்த 2வது இந்திய ஜோடியாகவும் அஸ்வின் – ஜடேஜா சாதனை படைத்துள்ளனர்.
இதையும் படிங்க: தோனியின் வாழ்நாள் சாதனையை சமன் செய்த அஸ்வின்.. ஜடேஜாவை பாராட்டிய சச்சின், சேவாக், கங்குலி
இதுவரை அவர்கள் மொத்தமாக 14 போட்டிகளில் 500 ரன்கள் குவித்துள்ளார்கள். அவர்களுக்கு முன்பாக கபில் தேவ் – சயீத் கிர்மனி 14 போட்டிகளில் 617 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளனர். மொத்தத்தில் ஒருமுறை அஸ்வினை பற்றி ஜடேஜா சொன்னது போல இப்போட்டியில் இந்திரன் சந்திரனாக சேர்ந்து அவர்கள் இந்தியாவை இப்போட்டியில் காப்பாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.



