இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 6ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற 39வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ததாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே ரஹமனுல்லா குர்பாஸ் 21 ரன்களில் அவுட்டானார்.
இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இப்ராகிம் ஜாட்ரானுடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த ரஹமத் ஷா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2வது விக்கெட்டுக்கு 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த கேப்டன் ஷாகிதி 3வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 26 ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த ஓமர்சாய் அதிரடியாக விளையாட முயற்சித்து 22 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
மேக்ஸ்வெல் வெறித்தனம்:
அந்த நிலைமையில் வந்த முகமது நபி 12 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய இப்ராஹீம் ஜாட்ரான் 8 பவுண்டரி 3 சிக்சருடன் உலகக் கோப்பையில் சதமடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனை படைத்து 129* (143) ரன்கள் குவித்தார். அவருடன் கடைசி நேரத்தில் ரசித் கான் அதிரடியாக 35* (18) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்ததால் 50 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 291/5 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.
அதைத்தொடர்ந்து 292 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு ட்ராவிஸ் ஹெட்டை டக் அவுட்டாக்கிய நவீன்-உல்-ஹக் அடுத்ததாக வந்து அடித்து நொறுக்கிய மிட்சேல் மார்ஷையும் 24 (11) ரன்களில் அவுட்டாக்கினார். அந்த நிலைமையில் டேவிட் வார்னரை 18 ரன்களில் அவுட்டாக்கிய ஓமர்சாய் அடுத்ததாக வந்த ஜோஸ் இங்லீஷையும் கோல்டன் டக் அவுட்டாக்கினார். போதாக்குறைக்கு மாரன்ஸ் லபுசன் 14, மார்க்கஸ் ஸ்டோனிஸ் 6, மிட்சேல் ஸ்டார்க் 3 ரன்களில் சீரான இடைவெளியில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார்கள்.
அதனால் 91/7 என மெகா சரிவை சந்தித்த ஆஸ்திரேலியாவின் வெற்றி கேள்விக்குறியான போது நம்பிக்கை நட்சத்திரம் கிளேன் மேக்ஸ்வெல் மிடில் ஆர்டரில் நங்கூரமாக நின்று அதிரடியாக விளையாடினார். அவருக்கு கேப்டன் பட் கமின்ஸ் சிங்கிள்களை எடுத்து ஸ்ட்ரைக்கை கொடுத்ததை பயன்படுத்திய மேக்ஸ்வெல் தனி ஒருவனாக ஆப்கானிஸ்தான் பவுலர்களை பந்தாடி அரை சதம் கடந்து ஆஸ்திரேலியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார்.
நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி சதமடித்த அவர் காலில் காயத்தை சந்தித்து வலியால் களத்திலேயே படுத்தார். ஆனாலும் அதற்கெல்லாம் அசராமல் முதலுதவிகளை எடுத்துக்கொண்டு ஒற்றைக்கால் தெம்புடன் தொடர்ந்து அடித்து நொறுக்கிய அவர் 21 பவுண்டரி 10 சிக்ஸருடன் இரட்டை சதமடித்து 201* (128) ரன்கள் விளாசி 46.5 ஓவரிலேயே ஆஸ்திரேலியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வித்தியாசத்தில் காலத்திற்கும் மறக்க முடியாத மகத்தான வெற்றி பெற வைத்தார்.
இதையும் படிங்க: ரோஹித் சர்மா இப்படி காட்டடி அடிக்க காரணமே இதுதான். அதுதான் சக்ஸஸ்க்கும் காரணம் – விக்ரம் ரத்தோர் கருத்து
இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் சேசிங் செய்யும் போது இரட்டை சதமடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையும் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற வரலாற்றையும் மேக்ஸ்வெல் படைத்துள்ளார். இதற்கு முன் 2011 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 158 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். அவருடன் கமின்ஸ் 12* (68) ரன்கள் எடுத்து இந்த மகத்தான வெற்றியில் பங்காற்றியதால் ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக நவீன், ஓமர்சாய், ரசித் கான் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தும் வெற்றி காண முடியவில்லை.