ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணியானது 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்த தொடரின் எந்த ஒரு போட்டியிலுமே தோல்வியை சந்திக்காத இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அபார வெற்றி பெற்றிருந்தது.
விரைவில் இந்தியாவிற்கு வரும் ஆசிய கோப்பை :
ஆனாலும் இந்த இறுதிப் போட்டியின் முடிவில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்ற பிறகு ஆசிய கோப்பை தொடரின் டிராபியினை பரிசளிப்ப விழாவின் போது வாங்கவில்லை. ஏனெனில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரான மோசின் நக்வி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மனாகவும், பாகிஸ்தான் நாட்டின் உள்துறை அமைச்சராகவும் இருப்பதினால் அவரிடமிருந்து கோப்பையை பெற்றுக் கொள்ள மாட்டோம் என்றும் இந்திய வீரர்கள் மறுத்துவிட்டனர்.
வேண்டுமென்றால் ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரிய துணைத் தலைவர் கலித்திடமிருந்து பெற்றுக் கொள்வதாகவும் இந்திய அணி முறையிட்டது. ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளாத மோசின் நக்வி நான் கோப்பையை வழங்கினால் மட்டுமே இந்திய அணிக்கு இந்த கோப்பை வழங்கப்படும் என்று கூறிவிட்டு நீண்ட நேர காத்திருப்புக்குப் பின்னர் கோப்பையை தானாக எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்.
இதனால் ஆசிய கோப்பையின்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இந்திய அணியானது தற்போது இந்தியாவிற்கும் திரும்பிவிட்டது. ஆனால் தற்போது வரை ஆசிய கோப்பை இந்திய அணியின் கைகளுக்கு வரவில்லை. இந்நிலையில் தற்போது துபாயில் நடைபெற்ற ஒரு பொதுக்குழு கூட்டத்தில் :
பிசிசிஐ சார்பில் துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா மற்றும் முன்னாள் பொருளாளர் ஆஷிஷ் ஆகியோர் கலந்து கொண்டு ஆசிய கோப்பையை இந்தியாவிடம் வழங்குவது குறித்த சில கேள்விகளை எழுப்பினர். அந்த கூட்டத்தின் முடிவில் இந்த ஆசிய கோப்பை தொடரின் டிராஃபியானது தனி நபருக்கு சொந்தமானது கிடையாது என்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் கோப்பையாகவும் இருப்பதினால் அதனை இந்தியாவிற்கு வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க : 2 டெஸ்ட் போட்டிகளிலும் பும்ரா விளையாடுவாரா? இந்திய அணியின் திட்டம் குறித்து பேசிய – சுப்மன் கில்
இதன் காரணமாக தற்போது மோசின் நக்வி அந்த கோப்பையை ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியத்திடம் ஒப்படைத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக வெகு விரைவில் ஆசிய கோப்பை டிராபியானது துபாயிலிருந்து இந்தியாவிற்கு வந்தடையும் என்று கூறப்பட்டுள்ளது.



