கண்டு பிடிக்கப்பட்ட ஆசியக் கோப்பை.. இந்தியாவிடம் தராமல் அடம் பிடிக்கும் பாகிஸ்தான் தலைவர் நக்வி

Asia Cup
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் கடந்த செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று முடிந்தது. அத்தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. குறிப்பாக பரம எதிரி பாகிஸ்தானை 3 முறை எதிர்கொண்ட இந்தியா ஹாட்ரிக் வெற்றிகளைப் பெற்று 9வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது.

அத்தொடருக்கு முன் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நிகழ்த்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் இயற்கை எய்தினார்கள். அதற்கு பதிலடியாக ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்காமல் இந்திய அணி வெளியேறியது. மேலும் ஆசிய கவுன்சில் தலைவராக இருக்கும் மோசின் நக்வி பாகிஸ்தான் வாரியத்தின் தலைவர் மற்றும் பாகிஸ்தான் அரசின் உள்துறை அமைச்சர் ஆகிய பொறுப்புகளையும் வகித்து வருகிறார்.

- Advertisement -

தராத பாகிஸ்தான் தலைவர்:

எனவே இறுதிப் போட்டியின் முடிவில் அவருடைய கைகளால் கோப்பையை வாங்க மாட்டோம் என்று இந்திய அணி தெரிவித்தது. அதனால் கோபமடைந்த மோசின் நக்வி இந்தியா எப்படி வெற்றியைக் கொண்டாடுகிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காக கையோடு கோப்பையை எடுத்துச் சென்றார். அதற்காக அசராத இந்திய அணி கையில் கோப்பை இருப்பது போல வெற்றியைக் கொண்டாடி அவருக்கு பதிலடி கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற கோப்பையை கொடுக்குமாறு மோசின் நக்விக்கு இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியுடன் துபாய்க்கு வந்து ஆசிய கவுன்சில் அலுவலகத்தில் தம்முடைய கையால் பிசிசிஐ கோப்பையை வாங்கிக் கொள்ளுமாறு மோசின் பதிலளித்தார். அத்துடன் ஆசியக் கோப்பையை யாருக்கும் தெரியாத இடத்தில் அவர் பூட்டி வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

- Advertisement -

கண்டுபிடிக்கப்பட்ட கோப்பை:

இந்நிலையில் இந்தியா வென்ற 2025 ஆசியக் கோப்பை இருக்குமிடம் கண்டறியப்பட்டுள்ளது. அது துபாயில் இருக்கும் ஆசிய கவுன்சில் தலைமை அலுவலகத்தில் இருக்கிறது. ஆனால் அந்தக் கோப்பை கண்ணாடி அறையில் பூட்டப்பட்டு மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதனுடைய சாவி மோசின் அவர்களிடம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கடினமான அந்த சோதனையில் சாதித்த சுப்மன் கில்.. வெற்றிகரமான கேப்டனாக தொடர்வார்.. கங்குலி நம்பிக்கை

பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா கோப்பையை கொடுக்குமாறு கடந்த மாதமே கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் இதுவரை அதற்கு செவி சாய்க்காத மோசின் கோப்பையை இந்தியாவிடம் கொடுக்காமல் அடம் பிடித்து வருகிறார். இதே நிலைமை நீடிக்கும் பட்சத்தில் ஐசிசியிடம் புகார் செய்து கோப்பை மீட்டெடுக்கப்படும் என்று சைக்கியா தெரிவித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement