Asia Cup 2023 : நினைச்சதை சாதித்த இந்தியா – 2023 ஆசிய கோப்பைக்கான தேதி, மைதானங்கள் – அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

Jay Shah IND vs PAk
- Advertisement -

ஆசிய கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஆசிய கோப்பை கடந்த வருடம் துபாயில் கோலாகலமாக நடைபெற்றது. சொல்லப்போனால் இலங்கையில் நடைபெறுவதாக இருந்த அந்த தொடர் பொருளாதார நெருக்கடியால் துபாய்க்கு மாற்றப்பட்டது. அந்த வகையில் டி20 தொடராக நடைபெற்ற அத்தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா மற்றும் பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை சாம்பியன் பட்டம் வென்றது. இருப்பினும் இந்த வருடம் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் ஒருநாள் போட்டிகளாக நடைபெறும் இத்தொடர் எங்கே நடைபெறும் என்பதில் கடந்த 6 மாதமாக பெரிய சர்ச்சைகளும் விவாதங்களும் நடந்து வந்தன.

ஏனெனில் பிசிசிஐ செயலாளராக இருக்கும் ஜெய் ஷா தலைவராக பொறுப்பேற்ற 2022 ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் 2023 ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் வாங்கியது. ஆனால் எல்லை பிரச்சனை காரணமாக ஏற்கனவே கடந்த 10 வருடங்களாக இருதரப்பு தொடர்களில் மோதுவதையே நிறுத்தியுள்ள இந்தியா பாதுகாப்பு பிரச்சனைகளால் அரசின் அனுமதியின்றி பாகிஸ்தானுக்கு பயணித்து இத்தொடரில் பங்கேற்காது என அறிவித்த ஜெய் ஷா அதை பொதுவான இடத்தில் நடத்துவதற்கு தேவையான அழுத்தம் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

- Advertisement -

சாதித்த இந்தியா:
இருப்பினும் ஆசிய கவுன்சில் தலைவராக இருக்கும் நீங்கள் தங்களிடம் கேட்காமல் இப்படி அறிவித்ததை எதிர்பார்க்கவில்லை என்று அடுத்த நாளே அறிவித்த பாகிஸ்தான் வாரியம் எங்கள் நாட்டுக்கு வராமல் போனால் வரும் அக்டோபரில் உங்கள் நாட்டில் நடைபெறும் 2023 ஐசிசி உலகக் கோப்பையில் நாங்கள் புறக்கணிப்போம் என்று அதிரடியாக தெரிவித்தது. அப்போதிலிருந்தே இரு நாட்டுக்குமிடையே அனல் பறந்த விவாதங்கள் நடைபெற்ற நிலையில் பல வருடங்களாக போராடி மீண்டும் தங்களது நாட்டில் சர்வதேச போட்டிகளை நடத்துவதால் இத்தொடரை இதர நாட்டுக்கு நகர்த்த முடியாது என்று பாகிஸ்தான் அடம் பிடித்தது.

மறுபுறம் 2023 பிஎஸ்எல் தொடரில் கராச்சி மைதானத்திற்கு அருகே பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சம்பவங்கள் நிகழ்ந்ததால் எங்கள் அணியை அனுப்ப முடியாது என்று பாகிஸ்தானுக்கு தொடர்ந்து இந்தியா பதிலடி கொடுத்து வந்தது. இருப்பினும் பணக்கார வாரியமாக இருக்கும் பிசிசிஐயை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது என்று உணர்ந்த பாகிஸ்தான் வேண்டுமானால் இந்தியா பங்கேற்கும் போட்டிகளை இலங்கையில் நடத்திக் கொள்ளுங்கள் ஆனால் தங்களது அணி பங்கேற்கும் போட்டிகள் தங்கள் நாட்டில் தான் நடைபெற வேண்டும் என்று உறுதியாக இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் ஏற்கனவே உரிமையை கொடுத்து விட்டதால் பாகிஸ்தானின் பரிந்துரைகளை ஏற்ற ஆசிய கவுன்சில் 2023 ஆசியக் கோப்பையை இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய 2 நாடுகளில் நடத்துவதற்கு அனுமதி கொடுத்துள்ளது. அதன் படி ஆசிய கோப்பை 2023 தொடர் 50 ஓவர் போட்டிகளாக வரும் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை நடைபெறுகிறது. அதில் பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபால் ஆகிய அணிகள் விளையாட உள்ளன.

குறிப்பாக ஆகஸ்ட் 31ஆம் தேதி துவங்கும் இந்த தொடரில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபால் ஆகிய அணிகளுக்கு எதிராக பாகிஸ்தான் பங்கேற்கும் 4 லீக் போட்டிகள் மட்டும் அந்நாட்டில் நடைபெற உள்ளது. ஆனால் இந்தியா பங்கேற்கும் 4 லீக் போட்டிகளும் சூப்பர் 4 சுற்று போட்டிகளும் இலங்கையில் நடைபெறுகின்றன. அதுமட்டுமின்றி செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதி போட்டியும் இலங்கையில் நடைபெற உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் பாகிஸ்தான் மண்ணில் 4 போட்டிகள் இலங்கையில் 9 போட்டிகள் என மொத்தம் இத்தொடரில் 13 போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்கான முழுமையான அதிகாரப்பூர்வமான அட்டவணை விரைவில் வெளியாகும் என்று ஆசிய கவுன்சில் வாரியம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:உலகில் யாருமே நம்மை ஜெயிக்க முடியாது என்ற திமிரே ஃபைனலில் தோற்க காரணம் – இந்தியாவை விளாசிய வெ.இ ஜாம்பவான்

அந்த வகையில் பாகிஸ்தானுக்கு செல்லக்கூடாது என்று விடாப்பிடியாக நின்ற இந்தியா நினைத்ததை சாதித்துள்ளது என்றே சொல்லலாம். அதே சமயம் கடைசியாக கடந்த 2008ஆம் ஆண்டு ஆசிய கோப்பையை நடத்திய பாகிஸ்தான் 15 வருடங்கள் கழித்து அந்த தொடரின் 4 போட்டிகளை தங்கள் நாட்டில் வெற்றிகரமாக நடத்த உள்ளது.

Advertisement