- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஆசிய கோப்பை இலங்கையில் நடைபெறாது, சௌரவ் கங்குலியின் அதிகார பூர்வமாமன அறிவிப்பு இதோ

இங்கிலாந்து சுற்றுப்பயண கிரிக்கெட் போட்டிகளை முடித்துக்கொண்டு வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்தியா அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் இன்று ஜூலை 22-ஆம் தேதி துவங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஓய்வெடுக்கும் நிலையில் ஷிகர் தவான் தலைமையில் சமீபத்திய தொடர்களில் அசத்திய இளம் வீரர்களுடன் இந்தியா களமிறங்குகிறது. இருப்பினும் அடுத்ததாக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் தினேஷ் கார்த்திக், அஷ்வின் போன்ற முக்கிய வீரர்கள் விளையாடுகின்றனர்.

வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதியன்று அமெரிக்காவின் ப்ளோரிடா நகரில் நிறைவுக்கு வரும் இந்த டி20 தொடரை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் இந்தியா 10 நாட்கள் இடைவெளிக்குப் பின் ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. ஆகஸ்ட் 18, 20, 22 ஆகிய தேதிகளில் தலைநகர் ஹராரே நகரில் நடைபெறும் அந்த தொடரில் மீண்டும் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு 2-வது தர இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஆசிய கோப்பை:
அந்த தொடருக்குப் பின் தாயகம் திரும்பும் இந்தியா 5 நாட்கள் இடைவெளிக்கு பின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய கோப்பை தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட முதல் தரமான இந்திய அணி களமிறங்கும் என்று நம்பப்படுகிறது. முன்னதாக இந்த தொடர் வரும் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 11 வரை அண்டை நாடான இலங்கையில் நடைபெறும் என்று ஏற்கனவே ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்திருந்தது.

ஆனால் சமீப காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கை மக்கள் பொங்கியெழுந்து அரசுக்கு எதிராக 3 மாதங்களுக்கும் மேலாக வீதிகளில் களமிறங்கி போராடினர். முன்னாள் இலங்கை வீரர்கள் சனத் ஜெயசூர்யா, அரவிந்தா டீ சில்வா உட்பட பலரும் அதில் பங்கேற்ற நிலையில் இறுதி வரை மக்கள் புரட்சி வெற்றி பெற்றதால் அதிபர் தப்பி ஓடியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் அந்நாட்டில் ஆட்சி கலைக்கப்பட்டு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இலங்கையில் சந்தேகம்:
அதன் காரணமாக அங்கு ஆசிய கோப்பை திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் கடந்த சில மாதங்களாகவே நிலவி வருகிறது. ஒருவேளை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டால் வங்கதேசம் அல்லது துபாயில் நடத்துவதற்கான மாற்று திட்டத்தையும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வைத்திருந்தது. இருப்பினும்  போராட்டத்திற்கு மத்தியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக 3 வகையான கிரிக்கெட்டையும் வெற்றிகரமாக நடத்தி வருவதால் ஆசிய கோப்பையையும் வெற்றிகரமாக நடத்தி தருகிறோம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்த வந்த நிலையில் அதற்கு பாகிஸ்தானும் ஆதரவாக இருந்தது.

ஆனால் ஏற்கனவே கடந்த 2020இல் நடைபெறுவதாக இருந்த ஆசிய கோப்பை கரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டதால் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது. எனவே எந்த காரணத்திற்காகவும் இந்த வருட ஆசிய கோப்பை தள்ளிப்போகவோ அல்லது ரத்து செய்யப்படும் நிலையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் விரும்பவில்லை.

- Advertisement -

மேலும் இப்போதே ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் பங்கேற்ற கிரிக்கெட் தொடர்களில் இடையிடையே மழையால் நிறைய நாட்கள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அந்த நிலைமையில் ஆசிய கோப்பை நடைபெறவிருக்கும் ஆகஸ்ட் – செப்டம்பரில் இலங்கையில் மழைக்காலம் என்பதும் அங்கு அந்த தொடரை நடத்துவதற்கு ஆசிய கவுன்சில் யோசித்து வந்தது. அத்துடன் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் ஆசிய கோப்பையை தங்களது நாட்டில் நடத்த உகந்த சூழ்நிலை இல்லை என்று இலங்கை வாரியமும் கடைசி நேரத்தில் கை விரித்துள்ளது.

கங்குலி அறிவிப்பு:
அதே காரணத்தால் விரைவில் நடைபெற இருந்த 2022 இலங்கை பிரீமியர் லீக் டி20 தொடரையும் அந்நாட்டு வாரியம் தள்ளிவைத்துள்ளது. இந்நிலையில் ஆசிய கோப்பை திட்டமிட்டபடி இலங்கையில் நடைபெறாது துபாயில் நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதுபற்றி நேற்று நடந்த உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பின் அவர் பேசியது பின்வருமாறு.

“ஆசிய கோப்பை ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற உள்ளது. உலகிலேயே அந்த ஒரு இடத்தில் தான் எப்போதும் மழையும் பெய்யாது” என்று தெரிவித்தார். முன்னதாக ஏற்கனவே கடந்த 2018 ஆசிய கோப்பை துபாயில் நடைபெற்றதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து இந்த தொடருக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -
Published by