
ஐக்கிய அரபு அமீரகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த 2025 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரினை இந்திய அணி வெற்றிகரமாக கைப்பற்றி இருந்தாலும் அந்த தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனான சுப்மன் கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது பலரது மத்தியிலும் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. ஏனெனில் இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் துவக்க வீரராக விளையாடிய நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா போட்டிக்கு போட்டி 200 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு மேல் விளையாடி அசத்தினார்.
இந்த தொடர் முழுவதுமே மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 314 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதினையும் வென்றிருந்தார். அதே வேளையில் அவருடன் களமிறங்கியிருந்த சுப்மன் கில் 21 ரன்கள் சராசரியுடன் 127 ரன்கள் மட்டுமே குவித்து இருந்தார். இதன் காரணமாக இந்திய டி20 அணியில் இனியும் சுப்மன் கில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி 15 டி20 போட்டிகளில் விளையாடவுள்ள வேளையில் அதில் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை துவக்க வீரராக இந்திய அணி பயன்படுத்தி பார்க்க வேண்டும் என்று முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சில கருத்துக்களை பகிர்ந்து உள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
என்னைப் பொறுத்தவரை டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு ஒரு வாய்ப்பினை வழங்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் அபிஷேக் சர்மாவுடன் இணைந்து இறங்கினால் மிகச் சிறப்பாக இருக்கும் என்றும் தோன்றுகிறது. இருவருமே இடதுகை ஆட்டக்காரர்களாக இருந்தாலும் இருவருமே அதிரடியான துவக்கத்தை வழங்க கூடியவர்கள்.
எனவே இந்த டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக அவருக்கு ஒரு வாய்ப்பை துவக்க வீரராக இந்திய அணி வழங்க வேண்டும் என்று தான் விரும்புவதாக அஸ்வின் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்த ஆசிய கோப்பை தொடரினை இந்திய அணி வெல்லும் என்பதில் தனக்கு ஆரம்பத்தில் இருந்தே எந்த ஒரு சந்தேகம் இல்லை என்று குறிப்பிட்டார்.
இதையும் படிங்க : வெ.இ அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ
எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடரிலும் இந்திய அணி பலமான அணியாக இருக்கும் என்றும் குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் உலகக்கோப்பை அணிக்கான முதன்மை சுழற்பந்து வீச்சாளர்களாக விளையாட வேண்டும் என்றும் தனது கருத்தினை அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.