விஜய் ஷங்கர் நல்ல பிளேயர் தான். ஆனா இந்த விஷயத்துல அவர் கவனம் செலுத்தியே ஆகனும் – அஷ்வின் ஓபன்டாக்

shankar
- Advertisement -

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரரான விஜய் சங்கர், அந்த தொடரில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவரை அணியில் இருந்து நீக்கும் முடிவை எடுத்தது இந்திய தேர்வுக் குழு. அதற்குப் பிறகு அவருக்கு இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு மறுக்கப்பட்டு, மொத்தமாகவே அணியிலிருந்து ஓரம்கட்டப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு இந்திய அணியில் தனக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பேட்டியளித்திருந்து விஜய் சங்கர்,

Shankar

- Advertisement -

அந்த பேட்டியில் தன்னை உலகின் சிறந்த ஆல்ரவுண்டர்களாக விளங்கிய ஜாக்யூஸ் கலீஸ் மற்றும் ஷேன் வாட்சனுடனும் ஒப்பிட்டு பேசி தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சிரிப்பை வரவழைத்திருந்தார். இந்நிலையில் விஜய் சங்கர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் என்று கூறியிருக்கிறார் தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின். விஜய் சங்கரைப் பற்றி கூறிய அஷ்வின், இந்தியாவிற்காக ஒரு நாள் உலக கோப்பை தொடரில் விளையாடியுள்ள விஜய் சங்கர், ஒரு நல்ல அனுபவம் வய்ந்த சிறந்த வீரர் என்றும், விஜய் சங்கருக்கு ஏற்படும் காயங்களால் தான் அவர் சரியாக விளையாட முடியாமல் தவிக்கிறார் என்றும் கூறினார்.

இதுபற்றி பேசிய அவர், கிரிக்கெட் ரசிகர்கள் வீரர்களுக்கு எற்படும் காயங்களைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் ஒரு சக வீரராக காயத்திலிருந்து மீண்டு வந்து விளையாடுவது எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும். அவர் உண்மையிலேயே நன்றாக போராடினார். ஆனால் காயங்கள் அவரை மீண்டும் தடுமாற வைத்தது. இளம் வயதில் காயங்களை கடந்து வந்து விளையாடி விடலாம்.

ஆனால் 30-31 வயதாகும் விஜய் சங்கரால் அதிலிருந்து மீண்டு வருவது கடினமாகத்தான் இருக்கும் என்று கூறிய அஷ்வின், விஜய் சங்கர் தமிழ்நாடு அணிக்கு கண்டிப்பாக தேவை என்ற கருத்தையும் கூறியுள்ளார். தமிழ்நாடு அணியில் பல திறமையான இளம் வீரர்கள் இருக்கின்றனர். அவர்களின் திறமையை மேம்படுத்தவும், அணியின் சமநிலைத் தன்மையை தக்க வைத்துக் கொள்ளவும் நிச்சயமாக தமிழ்நாடு அணியில் விஜய் சங்கர் இருந்தாக வேண்டும் என்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியுள்ளார்.

shankar

சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்த விஜய் சங்கர், அந்த பேட்டியில் தாம் தமிழ்நாடு அணியை விட்டு விலகி வேறு ஒரு அணிக்காக விளையாடும் முடிவைப் பற்றி யோசித்திருப்பதாக கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement