
இந்திய அணியின் முன்னணி வீரரும், தமிழக சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் கடந்த 2010ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 70 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 111 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 250, 300 மற்றும் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.
அஸ்வின் 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய டி20 போட்டிகளில் விளையாடுவது கிடையாது. மேலும் ஒரு நாள் போட்டிகளிலும் ஓரங்கட்டப்பட்ட அஷ்வின் டெஸ்ட் போட்டிகளில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி நட்சத்திர வீரராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது நியூசிலாந்து அணிக்கெதிராக துவங்கவிருக்கும் டெஸ்ட் தோருக்காக நியூசிலாந்து சென்றுள்ள அஸ்வின் அங்கு ஒரு முக்கியமான தகவலை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பகிர்ந்துகொண்டார்.
அதில் அவர் கூறியதாவது : எனக்கு 14 15 வயது இருக்கும் போது உள்ளூர் கிரிக்கெட்டில் நான் சென்னையில் விளையாடி கொண்டிருந்தேன். அப்பொழுது இறுதிப்போட்டிக்கு எங்கள் அணி தகுதி ஆனதும் நான்கைந்து பேர் கொண்ட கும்பல் ராயல் என்ஃபீல்டு வாகனத்தில் வந்து என்னை பின்புறம் அமர்த்தி ஒரு கடைக்கு கொண்டுசென்றனர். மேலும் அங்கு டீ, சமோசா மற்றும் பஜ்ஜி போன்ற அனைத்தையும் எனக்கு வாங்கி கொடுத்தனர்.
பின்னர் அதை சாப்பிட்ட பின் போட்டிக்கு போகலாம் நேரமாகிவிட்டது என்று நான் கூறியபோது அவர்கள் என்னை மிரட்டத் தொடங்கினார்கள். எதிரணி வீரர்கள் எனக்கு தெரிந்தவர்கள் நீ இன்றைய போட்டியில் விளையாட கூடாது. அதனால் தான் உன்னை கூட்டி வந்தோம். மீறி நீ பந்து வீசினால் உனது விரலை வெட்டி விடுவேன் என்று அவர்கள் என்னை மிரட்டினார்கள் என்று தனது சிறுவயதில் நடந்த மோசமான அனுபவம் குறித்து அஸ்வின் பகிர்ந்து குறிப்பிடத்தக்கது.