இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பாக்சிங் போட்டியாக மெல்போர்ன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதல் நாள் ஆட்டநேரம் முடிவதற்கு முன்பாக தங்களது முதல் இன்னிங்சை முடித்த ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதிகபட்சமாக அந்த அணியின் முன்னணி இளம் வீரரான மார்னஸ் லாபுஷேன் 48 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 38 ரன்களும் குவித்தனர். இந்திய அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 4 விக்கெட்டுகளையும், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அறிமுக வீரர் முகமது சிராஜ் தனது அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய அணியின் சிறப்பான பவுலிங்கில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி எந்த கட்டத்திலும் ரன்களை குவிக்கும் முனைப்பு காட்ட முடியாமல் 195 ரன்களுக்கு சுருண்டது. குறிப்பாக அஸ்வின் தனது மாயாஜால சுழலை இந்த போட்டியில் எல்லா இடத்திலும் வெளிப்படுத்தினார். குறிப்பாக 24 ஓவர்கள் வீசிய அவர் வெறும் 35 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் ஆஸ்திரேலிய மண்ணில் முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்துள்ளார். அதாவது இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் அதிக முறை 3 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையை அனில் கும்ப்ளே ஏழு முறை எடுத்து தன்வசம் வைத்துஇருந்தார். அந்த சாதனையை தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் தகர்த்து 8-வது முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
மேலும் ஆஸ்திரேலியா போன்ற வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் இவ்வாறு சிறப்பாக பந்து வீசுவது அசாத்தியமான ஒன்று என்றும் அஸ்வினின் பந்துவீச்சை அனைவரும் பாராட்டி வருகின்றனர். தமிழக வீரர் அஸ்வின் கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ஆஸ்திரேலியா நாட்டிற்கு 4 முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு 15 இன்னிங்ஸ்களில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடி 35 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.